‘பாட்மின்டன்’ வீராங்கனை பற்றி, சமூக வலைதளத்தில் நடிகர் சித்தார்த் தரக்குறைவாக கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, அவரிடம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.
பஞ்சாபில் பிரதமர் மோடி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.அதில், ‘நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது’ என கூறியிருந்தார்.அதற்கு நடிகர் சித்தார்த் எதிர் கருத்து பதிவு செய்தபோது, சாய்னா நேவலை தரக்குறைவாக விமர்சித்து இருந்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிசார் சாய்னா நேவல் குறித்து சித்தார்த் பதிவு செய்த தரக்குறைவான கருத்துகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ‘சம்மன்’ அனுப்பினர். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக விசாரணை நடத்தவும் முடிவு செய்தனர்.அதன்படி, இன்ஸ்பெக்டர் வினோத்குமார், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, சித்தார்த்திடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தார்.