சனாதன தர்மமும்! சாதுர்வர்ணமும்!! – 1

1
346

நமது சனாதன ஹிந்துதர்மத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் விமர்சனத்தின் முக்கிய அம்சமாக இருப்பது வர்ணாச்ரம தர்மம் பற்றியதாகும்.

பகுத்தறிவு பேசும் நாத்திகவாதிகளாயினும் சரி, மார்க்ஸியம் பேசும் இடதுசாரிகளாயினும் சரி, மெக்காலே கல்வி கற்று அதன் பார்வையிலேயே இருக்கும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஆயினும் சரி, அல்லது சமூக நீதி என்று சொல்லிக்கொண்டு ஜாதியவாதம் பேசுகின்ற சுயநலவாதிகள் ஆயினும் சரி அனைவருமே இந்த ஒரு புள்ளியில் ஒத்த கருத்தோடு ஒன்றுபட்டு சனாதன ஹிந்துதர்மத்தை வீழ்த்த பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த முயற்சி ஆங்கிலேயன் காலத்திலேயே துவங்கிவிட்டது. காரணம் நமது அகண்ட பாரத தேசத்தின் ஆன்மா நமது புனிதமான சனாதன ஹிந்துதர்மத்தில் தான் வாழ்ந்து வருகிறது என்பதனை ஆங்கிலேய சிந்தனையாளர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே பாரதத்தின் மீது தொடர்ந்து தங்களது ஆதிக்கம் நிலைக்க வேண்டுமெனில், தேசத்தின் ஆதார சுருதியாக விளங்கும் ஹிந்துதர்மத்தை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.

அதற்காக நமது சனாதன தர்மம் பற்றிய தவறான கருத்துக்களை பல்வேறு நிலைகளில் பதிவு செய்தார்கள். ஆங்கிலேயன் கொண்டு வந்த மெக்காலே கல்வி பயின்ற நமது நாட்டை சேர்ந்த பலரும் அதுதான் உண்மை என்று நம்பி இன்றுவரை சாதித்து வருகின்றனர். ஆங்கிலேயன் உருவாக்கிய அந்த கண்ணோட்டத்தை இவர்கள் யாரும் ஆத்மசுத்தியோடு ஆராய்ச்சி செய்து பார்ப்பதில்லை. சமீபமாக வந்த மூன்று நான்கு தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் நாம் என்ன தான் எடுத்து கூறினாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்களது சிந்தனை மழுங்கடிக்கப்பட்டுள்ளது. நாம் அறிந்துகொண்ட அளவில் அது பற்றி சிந்திப்போம்.

வர்ணாசிரம தர்மம்.
வர்ணாசிரம தர்மம் என்றவுடன் ஹிந்து தர்ம எதிர்ப்பாளர்கள் கையிலெடுப்பது ஆரிய திணிப்பு, பிராமண ஆதிக்கம், தீண்டாமை, சமூக நீதி என்றெல்லாம் சொல்லி நீட்டி முழக்கி வருகிறார்கள். ஆனால் வர்ணாசிரமம் என்பது தான் என்ன? அதாவது நமது முன்னோர்கள், தனி மனித வாழ்வும் சமூகவாழ்வும் ஒன்றை ஒன்று சார்ந்தும், அதே வேளையில் தன்னைத்தானே செப்பனிட்டுக் கொள்வதற்காகவும் பல விஷயங்களை யோசித்து, ஆய்வு செய்து, முயற்சி செய்து பார்த்து நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

ஒன்றொன்றாக சில விஷயங்கள். இரண்டிரண்டாக சில விஷங்கள், மூன்று மூன்றாக சில விஷயங்கள்.நான்கு நான்காக சிலவிஷயங்கள் என்று பகுத்துக் கொடுத்துள்ளனர். உதாரணத்திற்கு சதுர்வித புருஷார்த்தம் என்று சொல்லப்படும் பண்பாட்டு மூல்யங்களான அறம், பொருள், இன்பம், வீடு பேறு (தர்ம அர்த்த காம மோக்ஷ) என்று நான்கு விஷயங்களாக பகுத்துக் கொடுத்துள்ளனர். அது போன்றே வர்ணாசிரமமும். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று வர்ணம் மற்றொன்று ஆசிரமம். இந்த விஷயம் கூட ஹிந்துதர்ம எதிர்ப்பாளர்கள் பலருக்கும் தெரியாது.

ஆசிரமம் என்பது தனி மனித வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய கடமைகளை வலியுறுத்துகிறது. அதாவது பிரம்மச்சரியம், (பால்யம் முதல் இளமைக்காலம் வரையிலானது) கிரஹஸ்தன், (இல்லறத்தான்) வானப்பிரஸ்தி (தனி மனிதன் என்ற நிலையைத் தாண்டி சமூகம் பற்றி கவனம் செலுத்திடும் பருவம்) சந்யாசம் (துறவு) இது தனி மனிதனின் பருவம் மற்றும் பக்குவம் சார்ந்து சொல்லப்படும் விஷயம்.

வர்ணம்.
இது இன்று சொல்லப்படும் ஜாதி சார்ந்த விஷயம் அல்ல. சமுதாயம் தனது தேவைகளை தாமே பூர்த்தி செய்துகொள்வதற்காக தனக்குத்தானே செய்துகொண்ட ஏற்பாடு. அதற்காக சமுதாயத்தை நான்கு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் உண்டான கடமைகளை வகுத்திருக்கும் ஏற்பாடு. இதுபோன்ற சமூக கட்டமைப்பு வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.

சனாதன ஹிந்து தர்மத்தில் இந்த ஏற்பாடுகள் சமூக வாழ்வியலை ஒரே சீராக மேம்படுத்தத் தானே ஒழிய, யார் யார்மீதும் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அடிமைப்படுத்தவோ அல்ல. இதை அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

வர்ணாசிரமம் அப்படி என்ன தான் சொல்கிறது! முதலில் நான்கு ஆசிரமங்களைப் பார்ப்போம்.

நான் சிறுவனாக இருந்தபோது பெரியவர்கள் கூறிய வேடிக்கையான கதை. அதாவது இறைவன் உயிர்களை படைத்து, ஒவ்வொன்றாக அழைத்து அதற்கான ஆயுள் பலம், வாழ்க்கை முறை பற்றியெல்லாம் உபதேசிக்கிறார். கழுதையை அழைத்து ‘உனக்கு ஆயுள் முப்பது ஆண்டுகள். நீ மனிதர்களுக்கு உதவியாக பொதி சுமந்து, அவர்கள் தரும் உணவை உண்டு வாழ்ந்து வர வேண்டும்’ என்று கூறினார். உடனே கழதை’ அவ்வளவு காலம் எல்லாம் மனிதனுக்கு அடிமையாக இருக்க முடியாது. ஆகவே எனது பன்னிரண்டு ஆண்டுகள் ஆயுள் போதும்’ என்று பதினெட்டு ஆண்டுகளை திருப்பி தந்து விட்டு சென்றது

அடுத்து நாயை அழைத்து’ உனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுள். நீ மனிதனுக்கு உதவியாக காவல் காத்து நன்றியோடு வாழ்வாயாக’ என்று கூறினார். உடனே நாய் ‘அய்யோ! அவ்வளவு ஆண்டுகள் முடியாது எனக்கு பதினெட்டு ஆண்டுகள் போதும்’ என்று சொல்லி போய்விட்டது.

குரங்கை அழைத்து ‘உனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுள். வனத்தில் வாழ்ந்து காய்கனிகளை தின்று வாழவேண்டும்’ என்றதும், அய்யய்யோ அவ்வளவு நாள் எல்லாம் முடியாது. எனக்கு பதினைந்து ஆண்டுகள் போதும்’ என்று போய் விட்டது.

கடைசியில் மனிதனை அழைத்து, “உனக்கு 30 ஆண்டுகள் ஆயுள். உனக்காக பூவுலகில் இன்னின்ன ஏற்பாடுகள் செய்துள்ளேன்.அதனை அனுபவதித்து வாழ்வாயாக” என்று கூற, உடனே மனிதன் கூறினானாம் “என்ன இறைவா இது உனக்கே அடுக்குமா? இவ்வளவு செளகரியங்களைக் கொடுத்து வெறும் முப்பது ஆண்டுகள் தானா?” என்று கேட்டானாம். அதற்கு இறைவன் சரி கழதை விட்டு சென்ற பதினெட்டு ஆண்டுகளையும் வைத்துக்கொள் என்றானாம். மனிதன் மனம் திருப்தி படவில்லை. சரி நாய் விட்டு சென்ற பனிரெண்டு ஆண்டுகளையும் வைத்துக்கொள் என்று கூறியும் மனிதனுக்கு போதவில்லையாம். சரி குரங்கு வேண்டாமென்ற பதினைந்து ஆண்டையும் சேர்த்து எழுபத்தைந்து ஆண்டுகள் இனிமேல் எதுவும் கேட்காதே விரட்டிவிட்டானாம்.

அதனால்தான் மனித வாழ்வில் மன நிறைவான காலம் முப்பது ஆண்டுகள். பிறகு சுமார் இருபது ஆண்டுகள் கழுதை போன்று குடும்ப சுமையை சுமக்க வேண்டியுள்ளது. பிறகு பத்து பனிரண்டு ஆண்டுகள் சேர்த்ததை நாய் போல் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.அறுபது வயதிற்குமேல் மற்றவற்கு கேளிக்கை பொருளாகி ஓரம் ஒதுங்க வேண்டியுள்ளது.

இது விளையாட்டாக கூறினாலும் இதை ஆராய்ந்து பார்த்தால். உண்மைதானோ என்று தோன்றுகிறது. இது வேடிக்கைக்காக கூறப்பட்டது. உண்மையில் ஆசிரம தர்மம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்

பிரம்மச்சரியம்.
இது கற்றுக்கொள்ளும் பருவம். சிறார் பருவம் முடிந்து உலக விஷயங்களை அறிந்து கொள்ள துவங்கும் நிலை. கல்வி, கலை, வித்தை என்று அனைத்தையும் தேடுகின்ற பருவம். என்ன இது?என்ன இது? என்று அனைத்தையும் ஆய்ந்து அறிந்து கற்றுணர்ந்து கொள்ளும் பருவம். அந்தப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், கடமைகள் என்று பல விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றது. இது தனி மனிதனை, தனி மனித வாழ்விற்காகவும், சமூக வாழ்விற்காகவும் சரியான திசையில் வளர்த்தெடுக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடு. இதில் அவரவர் வாழ்விற்கேற்ற கல்வி மற்றும் பயிற்சி கிடைக்க ஏற்பாடு இருந்தது.

கிரஹஸ்தன்.happy-family-Buy Village Painting online india
இது இல்லற வாழ்வியல். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தகுதிகளும் பெற்ற பிறகு அடுத்தகட்டமான நகர்வு குடும்ப வாழ்க்கை. என்னது!என்னது! என்று எதையெல்லாம் தனதாக்கிக்கொள்ள வேண்டுமோ அதற்கான காலம். மனைவி என்னது’ மக்கள் என்னது, மனை என்னது, செல்வம் என்னது, புகழ் என்னது என்று தனது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளும் பருவம். அதே நேரம் இல்லறத்தில் உள்ளவர்களின் சமுதாயக்கடமைகள் என்று விரிவாக ஹிந்துதர்மம் வகுத்துள்ளது. இல்லறத்தாரின் கடமைகள் பற்றி வள்ளுவம் விரிவாகப் பேசுகிறது. நான்கு ஆசிரமங்களிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது இல்லற தர்மம்

வானப்பிரஸ்தி!
இது இல்லறத்தில் தனது குடும்பத்திற்குண்டான கடமைகளை ஆற்றி, நிறைவு செய்த பிறகு., இல்லற கட்டுக்குள் இருந்து சற்றே விடுபட்டு வெளிவிவகாரங்கள் குறித்து கவனம் செலுத்து பருவம். தாமரை இலைத்தண்ணீர் போல குடும்பத்தில் பட்டும்படாமலும் இருந்து கொண்டு ஆன்மீகம் மற்றும் சமூகம் பற்றிய சிந்தனைகளில் செல்லவேண்டிய காலம். இந்த ஆசிரமத்தில் குடும்பச் சுமையும் இருக்கக்கூடாது. குடும்பத்திற்கு சுமையாகவும் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட மனநிலையில் என்னவெல்லாம் தேடிச் சேர்த்திருந்தாலும், என்னதான் சாதித்து இருந்தாலும் என்னது என்று எதிலும் ஒட்டாத மனநிலைக்கு பக்குவப்பட வேண்டும். தனது வாழ்வின் அனுபவங்களில் இருந்து அடுத்த தலைமுறைக்கும் சமுதாயத்திற்கும் வழிகாட்ட வேண்டிய கடமை இப்போது உள்ளது.ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதில்தான் சிரமங்கள் உருவாகியுள்ளன.
“”
சந்யாசம் – துறவு! How to find your 'guru' or 'spiritual master'? – Empty Space
முதல் மூன்று பருவங்களும் முதிர்ந்த நிலையில் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறி. பற்றற்ற நிலைக்கு வாழ்வின் நகர்வு செல்லவேண்டும். என்னது என்றிட எதுவுமில்லை என்பதை உணர்ந்து இறையுணர்வில் மூழ்கிட வேண்டும். இந்நிலையில் இருந்து சமுதாயத்திற்கு நல்வழிகாட்டும் கடமை துறவியர்க்கு உண்டு.

இதுதான் வர்ணாசிரம தர்மத்தில் ஆசிரமங்கள் பற்றிய விஷயம் இனி சாதுர்வர்ணம் பற்றி சிந்திப்போம்.

கிருஷ்ண முத்துசாமி
krishnamuthuswamy@gmail.com

1 COMMENT

  1. ஆசிரமம் பற்றிய கிருஷ்ண. முத்துசாமி விளக்கம் மிகவும் நன்றாக, எளிமையாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லாசிகள் பல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here