‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம், 17ம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவடைவதால், அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது’ என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, அனைத்து தரப்பினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக, சுயேச்சை வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால், அனைத்து வேட்பாளர்களும், வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஏனைய பிரசாரங்கள் அனைத்தையும், ஓட்டுப்பதிவு முடிவுறும் நேரத்தில் இருந்து, 48 மணி நேரத்திற்கு முன் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.அதன்படி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரசாரங்கள் அனைத்தையும், வரும் 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது. இதை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.