தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுாரில் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சித்தர் பத்ரகிரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது இது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர் பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார். திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோவிலின், கிழக்கு கோபுரம் அருகே குகை போன்ற பகுதியில் பட்டினத்தாருக்கு சிலை உண்டு. இதே போல் மேற்கு கோபுரம் அருகே பத்ரகிரியாருக்கு நான்கரை அடி உயரமும், 350 கிலோ எடையும் கொண்ட சிலை உள்ளது. 14ம் தேதி, பத்ரிகிரியார் சிலை உடைக்கப்பட்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இது நல்லதல்ல என்று பக்தர்கள் கூறியுள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இது குறித்து கோவில் நிர்வாகம், ஆதீனகர்த்தர் அம்பலவான தேசிகர், போலீஸ் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு விசாரித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் கண்ணன் என்பவர், போலீசில் புகார் கொடுத்தார். அடுத்த நாள், திருவிடைமருதுார் வந்த அண்ணாமலை, உடைந்த சிலையை பார்வையிட்டார். கோவில் நிர்வாகி கூறுகையில், ”போலீசில் புகார் அளித்து உள்ளோம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசாரிடம் கொடுத்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.