கட்டுரை-தில்லையாடி வள்ளியம்மை (நினைவு தினம்) இன்று

0
579

1. மயிலாடுதுறை அடுத்த தில்லையாடியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முனுசாமி. தென் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வந்தார். அவரது மகளாக 1898 ல் பிறந்தார் வள்ளியம்மை. அங்குள்ள காலனி அரசின் பெண்கள் பள்ளியில் பயின்றார்.

2. தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு பிரிட்டீஷாரால் விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து 1913-ல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். காந்திஜியின் சொற்பொழிவுகள் இந்த இளம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விடுதலைக் கனலை மூட்டின.

3. போராட்டங்களில் இவரும் பங்கேற்கத் தொடங்கினார். ஒருமுறை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் காந்தியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபோது, ‘முதலில் என்னை சுடு பார்க்கலாம்’ என முன்னே போய் நின்றவர் வள்ளியம்மை.

4. ‘தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும்’ என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் மகளிர் சத்தியாகிரகப் படை அணி திரண்டது. அதில் பங்கேற்றவர்களுக்கு இயன்றவரை தொண்டு செய்தார்.

5. ‘சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?’ என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார்.

6. சுகாதாரமற்ற சிறை வாழ்க்கையாலும், சிறு பெண் என்றும் பாராமல் சிறையில் கடுமையாக வேலை வாங்கியதாலும், இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை விடுவிக்க அரசு முடிவு செய்தது. விடுதலையாக மறுத்த வள்ளியம்மை, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே வெளியே வந்தார். பின்னர் 10 நாட்கள் நோயுடன் போராடியவர், 1914 பிப்ரவரி 22-ம் தேதி தனது பிறந்தநாளன்றே உயிர்நீத்தார்.

7. ‘இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் கடமையைச் செய்தவர். மனோபலம், தன்மானம் மிக்கவர். அவரது இந்த தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும்’ என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார் காந்திஜி.

8. பல ஆண்டுகளுக்கு பிறகு, தில்லையாடிக்கு வந்த காந்திஜி, அந்த ஊர் மண்ணை கண்ணில் ஒற்றிக்கொண்டு கண்கலங்கினார். ‘பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்கு உரியவர்’ என்று புகழாரம் சூட்டினார்.

9. வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றுவதற்காக, தில்லையாடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பொது நூலகமும் செயல்பட்டுவருகிறது.

#தில்லையாடி_வள்ளியம்மை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here