தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், “ராமன் விளைவு’ கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் – பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார்.
கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் “இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்’ நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, “கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது’ என யோசித்தார்.
இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், “ராமன் விளைவை’ கண்டுபிடித்தார். “நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது’ என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.