பிரதமர் மோடியின் மனத்தின் குரல்

0
369

கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம். பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், (30 லட்சம் கோடி ரூபாய்) என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. இது பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின் வல்லமை, பாரதத்தின் ஆற்றல் ஆகியவற்றோடு தொடர்புடைய விஷயம். பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது, பாரதத்தின் விநியோகச் சங்கிலி பலமடைந்து வருகிறது என்ற மிகப்பெரிய செய்தியையும் இது நமக்களிக்கிறது. மேற்கொள்ளப்பட்ட உறுதிகளுக்காக இரவு பகலாக நேர்மையாக முயற்சிகள் செய்யும்போது, அந்த உறுதிகள் மெய்ப்படுகின்றன. மனிதரின் வாழ்க்கையிலும் கூட இவ்வாறே நடக்கிறது என்பதை நீங்களும் கவனித்திருக்கலாம்.

நமது சிறு தொழில்முனைவோர், கொள்முதலுக்கான அரசின் தளமான Government e-Market place (ஜெம்) வாயிலாக, பெரிய பங்காற்றி வருகிறார்கள். இப்போது சிறிய வியாபாரிகள், சிறிய கடைக்காரர்களும் கூட ஜெம் வலைவாசலில் அரசுக்குத் தங்களுடைய பொருட்களை விற்க முடியும். இது தானே புதிய பாரதம்! நாமனைவருமாக இணைந்து, தற்சார்பு பாரதத்தின் கனவை மெய்யாக்குவோம்.

பத்ம விருதுகள் அளிக்கப்படும் நிகழ்ச்சியில் நீங்கள் பாபா சிவானந்தை கவனித்திருப்பீர்கள். 126 வயது நிரம்பிய அந்த பெரியவரின் சுறுசுறுப்பைப் பார்த்து, நாம் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தோம். பாபா சிவானந்தர் இன்று தேசத்தின் விவாதப் பொருளாகியுள்ளார். அவரின் வாழ்க்கை நமக்கு கருத்தூக்கம் அளிக்கவல்லது.

நமது கலாச்சாரத்தில் அனைவருக்குமே 100 ஆண்டுக்காலம் வாழ நல்வாழ்த்துக்கள் அளிக்கப்படுகிறது. நாம் ஏப்ரல் 7ல் உலக ஆரோக்கிய தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இன்று உலகெங்கிலும் ஆரோக்கியம் தொடர்பாக பாரத நாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. கத்தார் நாட்டில் உலக சாதனை முயற்சியாக 114 நாட்டு மக்களுக்கு ஒரு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயுஷ் தயாரிப்புத் துறையின் சந்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் உலகிலும் ஆயுஷ் துறை ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கியத்தோடு நேரடித் தொடர்பு உடையது தூய்மை. இப்படிப்பட்ட ஒரு தூய்மை ஆர்வலர் மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் வசிக்கும் சந்திரகிஷோர் பாட்டீல், இவர் கோதாவரி நதிக்கருகே நின்று கொண்டு, நதியிலே குப்பைக் கூளங்களை வீசி எறிவதை தடுத்து மக்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். மற்றொரு தூய்மை ஆர்வலரான ஒடிஷாவின் புரியைச் சேர்ந்த ராஹுல் மஹாராணா, ஞாயிற்றுக் கிழமை தோறும் புரியில் இருக்கும் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று நெகிழிக் குப்பைகளை அகற்றுகிறார். முப்பத்தடம் நாராயணன் கோடையில் பறவைகளும் விலங்குகளும் நீருக்காகத் தவிக்கக் கூடாது என்பதற்காக, மண் பாத்திரங்களை விநியோகம் செய்து வருகிறார், அந்த எண்ணிக்கை ஒரு லட்சதைக் கடக்க இருக்கிறது. இந்தப் பணிகள் நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கிறது.

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க நம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். நீரின் மறுசுழற்சிக்கும் நாம் அதே அளவு முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். சற்றே முயன்றாலும் கூட, நமது வீடுகளில் இதற்கான அமைப்புகளை ஏற்படுத்த முடியும். நீரைச் சேமிக்கும் பணியில் எனக்குக் குழந்தைகள் மீது மிகவும் நம்பிக்கை இருக்கிறது. தூய்மை விஷயத்தை எவ்வாறு நமது குழந்தைகள் ஒரு இயக்கமாக ஆக்கினார்களோ, அதே போலவே அவர்கள், நீருக்கான போராளிகளாக மாறி, நீரைப் பராமரிப்பதில் துணை நிற்க வேண்டும்.

சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, தனது பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் 150க்கும் மேற்பட்ட குளங்கள் ஏரிகளில் மாசகற்றும் கடமையை மேற்கொண்டிருக்கிறார். இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மஹாராஷ்டிரத்திலும் ரோஹன் காலே என்ற நண்பர், ஆயிரக்கணக்கான படிக்கிணறுகளைப் பராமரிப்பது என்ற குறிக்கோளை மேற்கொண்டிருக்கிறார். தடுப்பணைகள் கட்டுவதாகட்டும், மழைநீர் சேகரிப்பாகட்டும், இதிலே தனிநபரின் முயற்சியும் கூட்டுமுயற்சிகளும் அவசியம். நீங்கள் நல்ல முயற்சிகளைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த சமூகத்தில் உள்ள பெண்களின் நிலையைப் பார்த்துத் தான் முடிவு செய்ய வேண்டும். கண்டிப்பாகப் பெண் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன். பள்ளிகளில் பெண் பிள்ளைகளின் சேர்க்கையை அதிகரிக்க பெண் குழந்தைகள் கல்விச் சேர்க்கை விழா தொடங்கப்பட்டிருக்கிறது.

மஹாத்மா புலேயின் பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 11ல் வருகிறது, பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 14ல் வருகிறது. இந்த இரு மாமனிதர்களும் வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராகப் பெரும் போரைத் தொடுத்தார்கள். மஹாத்மா புலேயின் இந்தப் போராட்டத்தில் அவர் மனைவி சாவித்ரிபாய் புலேவின் பங்களிப்பும் மகத்துவம் நிறைந்தது. மஹாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, பாபாசாஹேப் அம்பேத்கரோடு தொடர்புடைய இடங்களைக் கண்டிப்பாகக் காணச் செல்லுங்கள். அது உங்களுக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here