அமெரிக்காவின் எதிர்ப்புக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(ஏப்.,11), ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் துவங்கியது முதல், ரஷ்யாவை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து சாடி வருகிறார். உக்ரைனுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். எனினும், அமைதியை விரும்பும் இந்தியா, இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை, இந்தியா வாங்கி வருகிறது. இதை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், அதற்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.