பிரதமர் பயணத்தை சீர்குலைக்க சதி?

0
193

பிரதமர் மோடி, ஜம்மு – காஷ்மீருக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் நிலையில், தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இரண்டு ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிரதமர் மோடி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, ஜம்மு – காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்திற்கு நாளை செல்கிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4:25 மணிக்கு, ஜம்மு புறநகர் பகுதிக்குள் நுழைந்த இரு பயங்கரவாதிகள், தற்கொலை படை தாக்குதல் நடத்த சுஞ்சவான் ராணுவ முகாமை நோக்கி சென்றனர். அந்த சமயத்தில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 15 பேர் பஸ்சில் பயணித்தனர்.அவர்களைப் பார்த்த பயங்கரவாதிகள், அந்த பஸ்சை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல்நடத்தினர். பின், அவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில், சி.ஐ.எஸ்.எப்., உதவி சப் இன்ஸ்பெக்டர் படேல் உயிரிழந்தார். இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட அவர்கள் இருவரும், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து அதிக அளவிலான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here