மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். காலை 10:00 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார்.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை வரவேற்கின்றனர். காரில் கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அரவிந்தர், அன்னை சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
காலை 11:00 மணிக்கு காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலை வளாகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பல்கலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.பகல் 12:25 மணிக்கு கவர்னர் மாளிகை செல்கிறார். அங்கு கவர்னர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோருடன் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பகல் 1:30 மணிக்கு அமித்ஷாவை, முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசுகிறார்.பகல் 1:55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, கம்பன் கலையரங்கம் செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 போலீசாருக்கு பணி ஆணை வழங்குகிறார். தொடர்ந்து, இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் மார்க்கெட் அருகில் புதிய பஸ் நிலையம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.மாலை 3:55 மணிக்கு, இந்திரா சதுக்கம் அருகே உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் செல்கிறார். அங்கு புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.