குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் ஹிந்து கடவுள்களின்ஆட்சேபனைக்குரிய உருவப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்குள்ள நுண்கலை பீடத்தின் ஆண்டு ஓவியக் கண்காட்சிக்காக, மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் கலைப் படைப்புகளை தயாரித்திருந்தனர். அதில் சில மாணவர்கள் ஹிந்து கடவுள்களின் உருவப்படங்களை உருவாக்க கட்அவுட்களைப் பயன்படுத்தினர், சிலர் நிர்வாண ஓவியங்களை வரைந்திருந்தனர். கட் அவுட்களைக் கொண்டு கலை வேலை செய்ய செய்தித்தாள்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட செய்தித்தாள்களில் கற்பழிப்பு செய்திகள் முக்கியமாக இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, அங்கு சென்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர்கள், கண்காட்சி அரங்கை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி டீனை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். மேலும் இதனை செய்த மாணவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஏ.பி.வி.பி அமைப்பின் தலைவர்கள் டீன் மற்றும் துணைவேந்தரிடம் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பல்கலைக் கழகம் உறுதியளித்துள்ளது.