சிவாச்சாரியார்களுக்கு இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் நிராதரவான நிலை

0
69

சிவாச்சாரியார்களுக்கு இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் நிராதரவான நிலை, திடீரென வந்ததில்லை. ஒரு ஆலமரத்தை சிறுக சிறுக அறுத்து, அதை ஒரு கயிற்றை கட்டி இழுத்தால் போதும்; புழுதிபட விழுந்து சிதறும் என்ற நிலைக்கு கொண்டு வந்து வைத்துள்ளோம்.

மொழி அரசியலை ஆன்மீகத்திற்குள் திணித்தால் என்ன நடக்கும், இறுதியில் நாம் என்ன ஆவோம் என்று சிவஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் சொன்னாரோ, அதன் வாசல் வரை வந்துவிட்டோம்.

சிவாகம விதிப்படி, ஆத்மார்த்த பூஜை செய்ய யாருக்கும் உரிமை உண்டு. சைவ தீக்ஷை எடுத்த யாருக்கும் அந்த உரிமை மறுக்கப்படுவில்லை ஆனால் கோவில்களில் பரார்த்த பூஜை செய்ய, ஆதிசைவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.

இதில் பிராமணர்களாக இருப்பதாலே ஒருவரால் ஆகமக்கோவிலில் சிவபூஜை செய்ய முடியாது. அப்படிச் செய்வதற்கு ஆகமம், அதிகாரத்தை வழங்கவில்லை. ஆதிசைவர்கள், அதுவும் தீக்ஷை பெற்ற க்ருஹஸ்தர் மட்டுமே பூரணத்துவத்துடன் பூஜை செய்ய தகுதியானவர் என்கிறது ஆகமம்.

பல்லாயிரம் வருடமாக இந்த மரபையே நாம் கடைபிடிக்கிறோம். கோவில் கட்டும் முறை ஆகமத்தில் உள்ளது, கோவிலை அமைக்கச் சொல்லும் தத்துவமே, அதன் வழிதான் உருவாகிறது. அதுவே,வழிபடு முறையையும் சொல்கிறது. இதில், கோவிலை ஏற்றுக் கொண்டு, மற்றவற்றைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும்?

அடுத்தது, இந்தியா முழுமைக்கும் சைவம் ஒன்றுதான். அது சிவபெருமானை பரம்பொருளாக வைத்து வழிபடும் ஒற்றை மரபே. இதில் பல உட்பிரிவுகளும், சம்பிரதாயங்களும் இருந்தாலும், அத்தனையும் ஒரே பெருங்குடையில்தான் உள்ளது.

இதில் ஆலய வழிபாட்டை முன்னிறுத்தும் எல்லா மரபுகளும், ஆகமத்தின் வழியிலேயேதான் நின்றன. அவற்றில் இன்று தமிழகத்தில் நிலைநின்ற சித்தாந்த சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆகமத்துக்கு புறம்பாக பேசுவதும் சரி, ஆதிசைவர்களான சிவாச்சாரியாயார்களுக்கு விரோதமாக பேசுவதும் சரி, இது பரிபூரணமான சைவ நிந்தனையே அன்றி வேறில்லை.

தமிழகத்தில் பெரும்பாலான சைவக் குடிகளுக்கு ஒரு காலத்தில் குருக்களாக சிவாச்சாரியார்களே இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள். அவர்களை ஆலயத்தை விட்டு வெளியேற்றுவதும், குரு ஸ்தானத்தை விட்டு வெளியேற்றுவதும்தான் சமயப்புரட்சி என்றால், நீங்கள் செய்து கொண்டிருப்பது மதமாற்றத்திற்கான ஆன்ம அறுவடை என்பதில் சந்தேகமே இல்லை..

இங்கிருக்கும் எல்லா குடிகளும் இணைந்துதான் சிவாச்சாரியார்கள் கோவில் பூஜை செய்யத் துணையாக நின்றோம். எவ்வளவோ மோசமான காலத்திலும் கூட இந்த மரபை பல நூறு ஆண்டுகளாக சீர்தூக்கி நிறுத்தியிருக்கிறோம். ஆனால் தற்போது கத்தியின்றி ரத்தமின்றி இந்த பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட மோசமான போர், அவர்களை ஆலயத்தை விட்டு வெளியேற்றுவதாகும்.

ஆதிசைவர் என்றில்லை, எந்த ஒரு சமூகத்தின் பாராம்பரிய பூஜை உரிமையையும் சட்டத்தினால் பறிக்கக் கூடாது. ஆசாரிகள், செங்குந்தர், பறையர் என எண்ணற்ற சமூகங்களுக்கு அந்த உரிமை இந்த மண்ணில் உள்ளது. அவற்றிற்கொரு பாதுகாப்பை உண்டு செய்ய வேண்டிய தேவை உள்ளது..

கம்யூனிஸ கலாச்சார புரட்சி யுகத்தில், இவற்றை சீர்குலைப்பது காலத்தேவையென முன்மொழியப்பட்டது. அது, அடுக்குகளை புரட்டிப்போட்டு, ஆன்மீகமற்ற ஜனசமூகத்தை பெருக்கியது.

பின்னொரு நாள், தாங்கள் நினைத்த பொன்னுலகம் எதார்த்தமல்ல என புரியவந்த ஜனதிரளுக்கு, அரசியல் பூகம்பத்தால் சிதைந்து சின்னாபின்னமான வீட்டில், தங்களுடைய பூஜைக்குரிய படங்களை மீட்க முடியாமல் போனது. அப்போது வாலறுக்கப்பட்ட நரிக்கொள்கைகள், இன்று வரை எல்லாவற்றிலும் ஊடுருவி, ஒரு நீண்ட மரபை அழிக்க நினைக்கிறது அந்த கருத்தியல். ஒரு உதாரணம் நியாபகத்துக்கு வருகிறது..👇

|| பாலச்சந்தருடைய ‘வெள்ளி விழா’ படத்தில் ஆராவமுதன் என்ற கதாபாத்திரத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பார்.அதில் ஆங்கிலேயர் ஆதரவு நிலைப்பாட்டில் வின்ஸ்டன் ஆராவமுதனாகி, சுதந்திரம் அடைந்த பிறகு காந்தி வாழ்க! நேரு வாழ்க! என்று கோஷம் போட்டு காங்கிரஸில் இணைந்து, பட்டேல் ஆராவமுதனாகிவிடுவார்.

பின் தொழிலாளர் கோஷம் போட்டு கம்யூனிஸ்ட்டில் இணைந்து, தன் குடுமியை வெட்டிக் கொண்டு, வைதீக நெறியை கைவிட்டு, ஸ்டாலின் ஆராவமுதனாக உருமாறுவார். இறுதியில் திமுகவை ஆதரித்து, அண்ணா வாழ்க சொல்லி, முரசொலி பத்திரிகை வாங்கிப் படித்து, ‘ஆடலரசன்’ என பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் கதாபாத்திரம்.

இது, தமிழ் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியை தெளிவாகவும் ஆழமாகவும் காட்டும் கதாபாத்திரம் என நினைக்கிறேன். அந்த ஆராவமுதன் ஒவ்வொரு ஜாதியிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள் அன்றும் இன்றும்..|| நிற்க.

அரசியலை சம்பிரதாயத்திற்குள் நுழைத்து, அதை ஆன்மீக புரட்சி என்று சொல்லும் கருதுகோளை நாம் உடைக்கவில்லை என்றால், நிச்சயமாக நமக்கு மீட்பில்லை. 1000 வருடமாக நம்மை பிறரால் என்ன செய்ய முடியவில்லையோ அதை இன்னும் 50 வருடத்தில் செய்து முடித்துவிடுவார்கள் என்று அச்சமூட்டும் அளவில் நிலைமை உள்ளது.

ஆதிசைவர்களுடைய வீழ்ச்சி, நம் பாரம்பரியத்தை வேருடன் சாய்க்கும்.
எல்லா நூற்றாண்டிலும், எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் எளிய மக்கள் காத்தது நமது தர்மத்தைதான்..

– சுந்தர்ராஜ சோழன் –
Chanakya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here