ஏ. என். சிவராமன் (1.3.1904– 1.3.2001)
ஆம்பூர் என்பது ஆழ்வார்குறிச்சிக்குத் தெற்கே 2 கி. மீ. தொலைவிலுள்ள ஒரு சிற்றூர்.
இங்கே பிறந்தவர்தான் ஆம்பூர் நாணுவையர் சிவராமன்.
அந்த மனிதரின் எளிமைக்கும் அவரது மேதைமைக்கும் சம்பந்தமில்லாதது போல தோற்றம்.
படித்தது பத்தாம் வகுப்பு தான். அதற்குள் நாடு விடுதலையடைய வேண்டி போராட வந்து விட்டார்!
படிப்பு நின்று விட்டது!
ஆனால் அவருடைய கல்வி தொடர்ந்தது!
அவருக்குத் தெரிந்த மொழிகள் கொஞ்சம்தான்.
பதினேழு!
தனது 93 ஆவது வயதில் அரபு மொழியைக் கற்றுக் கொள்ள முயன்றார்!
அவரறியாத எதுவும் உலகில் இல்லை எனும் அளவுக்கு அவருடைய சிந்தனையும் எழுத்தும் இருந்தன.
அரசியல், பொருளாதாரம், விவசாயம் போன்றவற்றில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு வியக்கத்தக்கது.
1970 களின் இறுதியில் ஆங்கில மொழித்திறனை தினமணி வாசகர்கள் வளர்த்துக் கொள்ளும் முகமாக
‘After Sucking the Air’ என்ற ஒரேயொரு ஆங்கிலச் சொற்றொடர் மூலம் தினமும் அரைப் பக்க அளவில் தொடர்ந்து ஏழெட்டு கட்டுரைகள் எழுதி
வந்தார் ஏ. என். எஸ்!
அவற்றையெல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் நான் எழுதி வைத்திருந்தேன்.
எவரோ வாங்கிப் போனார்!
கணக்கன், ஒன்றேகால் ஏக்கர் பேர்வழி, பாமரன், குமாஸ்தா என்ற புனைபெயர்களில் எழுதிய கட்டுரைகள் ஏராளம்.
கல்லூரி பக்கம் எட்டிப் பார்க்காத அவருடைய நூல்கள் கல்லூரியின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டன.
தினமணியில் அவர் எழுதும் தலையங்கங்களை கூர்ந்து கவனித்து வாசிக்கும் வாசகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அன்று இருந்தனர்.
அவருடைய அனுபவமும் அறிவுக்கூர்மையும் அவற்றில் பிரகாசிக்கும்!
எத்தனையோ விருதுகள் அவரை நாடி வந்த போதும், ராம்நாத் கோயங்கா விருதை மட்டும் ஏற்றுக் கொண்டார்.
அரசாங்கம் அளிக்க முன்வந்த பத்ம விருதுகளை ஏற்க மறுத்து விட்டார்!
பத்திரிகை ஆசிரியன் இதுபோன்ற விருதுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது.
பதினேழு வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்ள காந்தி விடுத்த அழைப்பை ஏற்று சிறை சென்றார்.
வெளியே வந்த பிறகு, 1934 ல் தினமணி நாளிதழ் தொடங்கப்பட்ட போது அப்போதைய ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் ( தென்காசிக்காரர்) தலைமையில் தினமணியின் துணையாசிரியாகச் சேர்ந்தார்.
1943 ல் ஆசிரியரானவர் 1987 வரையிலும் தொடர்ந்து 44 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இப்படிப்பட்ட ஒரு ஜீனியஸ் சில நேரங்களில் வேட்டி மேல் துண்டுடன் அலுவலகத்துக்கு வந்து விடுவார்!
இவருடைய எளிமைக்குச் சான்றாக ஒரு சம்பவம்:
பேராசிரியர் அ. ச. ஞா. அவர்கள் காரைக்குடி கம்பன் விழாவுக்குப் போவதாக இருந்தபோது ( 1962 அல்லது 1963) நானும் உன்னுடன் வருவேன் என்று அ. ச. ஞா. விடம் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே அவருடன் இருவர் வருவதாக இருந்த நிலையில் இவருடைய தகுதிக்கு அந்தச் சின்ன ஃபியட் காரில் அழைத்துப் போக வேண்டாம் என்று கருதிய அ. ச. ஞா., ‘நீங்கள் தனியாக வாருங்கள்’ என்று சொல்லியும் கேட்காத ஏ. என். எஸ்., ‘ உன் மடியில் படுத்துக் கொண்டாவது வருவேன்’ என்று குழந்தை போல பிடிவாதம் பிடித்தார்.
வேறு வழியின்றி அ. ச. ஞா. வும் சம்மதித்து, குறிப்பிட்ட நாளில் தன்னுடைய டிரைவரை சிவராமன் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்து வருமாறு கூறியிருக்கிறார்.
டிரைவர் புறப்படும் போது, அ. ச. ஞா. அவர்களின் மனைவி,
( இனி அ. ச. ஞா. அவர்கள் கூறுவார் :–+)
‘ குப்புசாமி, அவரைப் பார்த்தால் அப்பாவி மாதிரி இருப்பார். ஜாக்கிரதை. மிக்க மரியாதையுடன் அழைத்து வா”
என்று கூறினாள்.
இந்த நேரத்தில் என் மனைவி சொன்னது தேவையில்லாதது என்று கருதினேன். ஆனால் , பின்னர் நடந்ததை நினைத்துப் பார்க்கும் பொழுது அவள் சொன்னது எவ்வளவு சரியென்று பட்டது.
ஓட்டுநர் ஏ. என். எஸ். வீட்டுக்குச் சென்றார்.
பட்டா சாலையில், குப்புறப் படுத்துக்கொண்டு, ஒரு கைக்கு அணையாக ஒரு தலையணையை வைத்துக் கொண்டு வலக்கையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் ஒருவர்.
அவர் இந்த வீட்டுச் சமையல்காரன் என்று நினைத்து விட்டான் குப்புசாமி.
” ஓ ஐயரே” என்று விளித்து,
‘ இந்த வீட்டு ஐயாவை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன்’
என்று கூறிவிட்டு, காருக்குத் திரும்பிவிட்டான்.
ஏ. என். எஸ். அவர்கள் ஒரு ஜமுக்காளத்தில் ஒரு தலையணையைச் சுற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வந்து, டிக்கியைத் திறக்குமாறு கேட்டார்.
ஓட்டுநர் ” ஓ ஐயரே, அங்கே படுப்பதற்கு எல்லாம் தருவார்கள். ஐந்து பேர் போக வேண்டும். இந்தப் படுக்கைக்கெல்லாம் இடம் இல்லை “
என்று முரட்டுத்தனமாகக் கூறிவிட்டான்.
” நீ சொல்வது சரிதான் ” என்று கூறிய ஏ. என். எஸ் படுக்கையை உள்ளே கொண்டு சென்று போட்டுவிட்டார்.
இனிமேல்தான் வீட்டுக்காரர் பெரியவர் வரப்போகிறார் என்ற நினைப்புடன் , குப்புசாமி வண்டியின் கதவருகே மிக்க பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான்.
ஆனால், அவனுக்கு ஓர் அதிர்ச்சி.
யாரைப் பார்த்து ‘ஓ ஐயரே’ என்று கூப்பிட்டானோ, அதே மனிதர் ஒரு சிறு கைப்பெட்டியுடன் வண்டிக்குள் வந்து அமர்ந்து விட்டார்.
கையும் ஓடாமல் காலும் ஓடாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான்.
வண்டியை நிறுத்தி விட்டு, வீட்டின் பின்புறமாகச் சென்று ‘ அம்மா, அம்மா’ என்று கத்தினான்.
முன்புறத்தில் சிவராமனை நானும் என் மனைவியும் வரவேற்றுக் கொண்டிருந்தோம்.
குப்புசாமியின் குரலைக் கேட்டு என் மனைவி பின்புறம் சென்றாள்.
ஓட்டுநர் குப்புசாமி ‘ பெருந்தவறு நடந்துவிட்டது’ என்று சொல்லி, நடந்தது முழுவதையும் விவரித்தான்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, முன்புறம் வந்த என் மனைவி, நடந்தவற்றை அப்படியே சொல்லி, அவன் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.
இந்த விநாடிதான் சிவராமன் என்ற மனிதர் மாமனிதராக வளரும் சூழ்நிலை உருவாயிற்று.
விழுந்து விழுந்து சிரித்துவிட்டு,
” டேய் குப்புசாமி ” என்று அவரே அழைத்தார்.
மிகவும் பயத்துடன் அவன் அவர் எதிரே வந்து நின்றான்.
” குப்புசாமி, இன்றிலிருந்து போய்த் திரும்புகிற நான்கு ஐந்து நாட்கள் வரை வண்டி என்னுடையது. நீ என்னுடைய ஓட்டுநர். யார் சொல்வதையும் நீ கேட்கத் தேவையில்லை. நான் சொல்வது போல் செய்துவிட்டால் போதும் ” என்று சொல்லிவிட்டார்.
பிறகு புத்தம் புதிய ஒரு ரூபாய் தாள் அடங்கிய ஒரு கட்டை அவனிடம் கொடுத்துவிட்டு,
” இந்த ரூயாயெல்லாம் எதற்கு என்று நினைக்கிறாயா?
வண்டி புறப்படும் முதல் காரைக்குடி போய்ச் சேரும் வரை வேர்க்கடலை, நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றைச் சாலையில் எங்கே கண்டாலும், வண்டியை நிறுத்தி வாங்கிக் கொள். சாப்பிட்டுக் கொண்டே போகலாம் ” என்று கூறினார்.
அவர் சொன்னபடியே செய்தோம்…… ‘
‘…. ஒரு ஓட்டுநர் காட்டிய அவமரியாதையையும் மிக அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவனை ஒரு மகன் போல நடத்திய பொழுது சிவராமன் என்ற மனிதருக்குள் ஒரு மாமனிதர் புகுந்திருப்பதைக் காண முடிந்தது…. ‘
( நான் கண்ட பெரியவர்கள்)
இவர்தான் ஏ. என். சிவராமன் அவர்கள்!
ஆச்சரிய அறிஞர்தானே!
இன்று காலை இவர் பிறந்த ஆம்பூரில் இருந்து தயிர் விற்கும் பெண் வந்தார். அவரிடம் பரமகல்யாணி மறு வீடு முடிந்து சிவசைலம் திரும்பும் நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டேன்.
அவர் சொன்னது:
” சாமி சைலப்பர் சந்தோஷமாத்தான் போவாரு;
கல்யாணிதான் சடச்சாக்குல போவா ‘
என்றார்!
அதாவது பரமகல்யாணி தன் தாய் வீட்டைவிட்டுப் போகிறோமே என்ற வருத்தத்தோடு போவாளாம்!
அந்த வருத்தத்தை இந்தப் பெண்மணி எப்படி உணர்ந்தார்?
என்னவொரு பாவனை!
மா. பாரதிமுத்துநாயகம்