பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் வழியே ஆயுத கடத்தல்கள் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை அடுத்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் போலீசார் உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஜம்மு போலீசாரால், தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் 3 லஷ்கர் பயங்கரவாத அமைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தொடர்புடைய 7 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு மண்டல கூடுதல் டி.ஜி.பி. முகேஷ் சிங் கூறும்போது, காஷ்மீரில் உள்ள சிறுபான்மை சமூகம் மற்றும் அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த, திட்டமிட்ட பயங்கரவாதிகள் பணிக்கப்பட்டு உள்ளனர்.
ஜம்முவின் மலைப்பாங்கான பகுதியில் பயங்ரவாதம் வளர பாகிஸ்தான் மேற்கொண்ட சதி திட்டம் தவிர வேறெதுவுமில்லை. பாகிஸ்தானிடம் இருந்து டிரோன்கள் வழியே 14 முறை ஆயுத கடத்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.