தனி வாரியம் அமைக்க வேண்டும்

0
252

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், “ஹிந்துக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதனை வலியுறுத்தி ஹிந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த, ஹிந்து உரிமை மீட்பு பிரசார பயணம் நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ சர்ச்சுகள், மசூதிகளின் சொத்துகள், வருமானங்கள் அனைத்தும் அந்த மதங்களின் வளர்ச்சிக்கும், மதமாற்றத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஹிந்துக் கோயில்களின் சொத்துக்கள், வருமானங்களை அரசின் அறநிலையத் துறையே எடுத்துக் கொள்கிறது. தமிழக அறநிலையத் துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெறுகிறது. கோயில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும். ஹிந்துக்களுக்கும் தனி வாரியம் அமைக்க வேண்டும். புதுச்சேரியிலும் ஹிந்து அறநிலையத் துறையிடம் உள்ள கோயில்களுக்கு தனி வாரியம் அமைத்து தர வேண்டும். தமிழகத்தில் 5.25 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. இதில் பல நிலங்கள் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை தமிழக அரசு மீட்க வேண்டும். கோயில் நகைகளை உருக்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும். அந்த நகைகள் அப்படியே தொடர வேண்டும். சிதம்பரம் கோயிலில் மிரட்டும் வகையில் ஆய்வு செய்கின்றனர். நீதிமன்ற அனுமதியின் பேரில்தான் சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். சிதம்பரம் கோயில் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் கடவுள் மறுப்பாளர்களான தி.மு.க, தி.கவினர் அளித்த புகார்கள் தான். தமிழகத்தில் ஏழை ஹிந்து மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை. ஆனால், முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கின்றனர்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here