முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அப்போது, முப்படைகளின் தளபதிகள் உடன் இருந்தனர். பின்னர் அவர் பேசுகையில், “இந்திய ஆயுதப்படைகளின் மிக உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்வதில் பெருமைகொள்கிறேன். முப்படை தலைமை தளபதி என்ற முறையில் முப்படைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்வேன். அனைத்து சவால்கள், சிக்கல்களை நாம் இணைந்து சந்தித்து சமாளிப்போம்” என கூறினார். அனில் சவுஹான், நமது இந்திய ராணுவத்தின் கூர்கா ரைபிள்ஸ் படைப்பிரிவில் 1981ல் பணியில் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில், வடக்கு படைப்பிரிவில் காலாட்படையின் மேஜர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். வடகிழக்கு படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனரலாகவும், கிழக்கு படைப்பிரிவில் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் இன் சீஃப் ஆகவும் பணியாற்றி உள்ளார். 2021ல் பணி ஓய்வு பெற்ற இவர், பரம் வசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா உட்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.