தேனி : மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு கிடைக்காமல் தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதனை தவிர்க்க வீடு வீடாக மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என தேனியில் நடந்த பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பக்கன்சிங் குலாஸ்தே தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: ஊரக பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி திறன் அதிகரிப்பதால் வாழ்வாதாரம் மேம்படும். அதனால் சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களை நாம் உருவாக்கித்தர வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறைவான எண்ணிக்கையில் உள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் குறைவாக உள்ளனர். இதனை அதிகரிக்க வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏழைகளை பயனார்களாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் அதிகளவில் பா.ஜ., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. அதனால்தான் மாநில அரசு மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு சென்றடையாமல் முட்டுக்கட்டை போடுகிறது. நான் அடுத்த முறை இங்கு வரும்போது திட்டங்கள் முழுமையாக மக்களின் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்.’ என்றார்.