புதுடில்லி: தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்தின் இரண்டு தூண்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஐதராபாத்தில் இன்று (அக்.,11) துவங்கியது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றியதாவது: தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்திற்கான இரண்டு தூண்கள். தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
வங்கி சேவை இல்லாத 450 மில்லியன் மக்களுக்கு வங்கி சேவை வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். காப்பீடு இல்லாத 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்கள் தொகை அளவாகும்.
110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதி செய்து தரப்பட்டுள்ளது. 60 மில்லியன் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் பின் தங்கி விடக்கூடாது என்பதை இந்தியா உறுதி செய்கிறது.
சிறந்த கண்டுபிடிப்பு திறனுடன் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. தொழில் துவங்குவதில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. 2021ம் ஆண்டு முதல் தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது திறமையான இந்திய இளைஞர்களால் சாத்தியமானது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.