புதுடில்லி: இந்தியா குறித்து பாகிஸ்தான் தவறான மற்றும் பொய் பிரசாரம் செய்து வருகிறது என ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லெகி கூறியுள்ளனர்.
ருவாண்டாவின் கியாகிளி பகுதியில் நடந்த 145வது ‘இண்டர் பார்லிமென்டரி யூனியன்’ கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் பேசியதாவது:
எனது நாட்டிற்கு எதிராக தவறான மற்றும் பொய்யான பிரசாரத்தின் மூலம், இன்றைய விவாதங்களில் இருந்து திசைதிருப்ப பாகிஸ்தான் மீண்டும் இந்த தளத்தை தவறாக பயன்படுத்த தேர்வு செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மூடிவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை வன்முறைகளை நிறுத்திவிட்டு, அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடக்கும் ஆசியாவில் கலந்துரையாட்ல மற்றும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டில்மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லெகி பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. சர்வதேச பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. பயங்கரவாதத்திற்கான உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் மூட வேண்டும். பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சுமூக உறவையே இந்தியா விரும்புகிறது.
பாகிஸ்தானின் இன்றைய கருத்து, இந்தியாவின் உள்நாடு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் தலையிடுவதாக உள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் விவாதத்தை திசை திருப்புவதற்கு, இந்தியாவிற்கு எதிராக தவறான மற்றும் பொய்யான பிரசாரம் செய்ய இந்த மாநாட்டை பாகிஸ்தான் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது.
சிறுபான்மையின மக்களை இழிவாக நடத்துவது பற்றிய வரலாறு கொண்ட நாடு, உலகத்திற்கு அறிவுரை செய்வதற்கு பதில், தனது நாட்டில் அதனை செய்ய வேண்டும். மதம் மற்றும் இன சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்தும் நாடாக அந்நாடு உள்ளது. பாகிஸ்தானில், சிறுபான்மையினர் வழிபாடு செய்யும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சூறையாடவுது போன்ற செயல்கள் தொடர்ச்சியாக நடக்கிறது.
சிறுபான்மை இனத்தை சேர்ந்த மைனர் பெண்கள், மக்கள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து வைக்கப்படுகின்றனர். இது, அந்நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு முக்கிய ஆதாரம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார். இவ்வாறு அவர் பேசினார்