ஹரியானா: ‘2024 க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்ஐ ஏ கிளைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்’ என சிந்தனையாளர்கள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் பேசினார்.
சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள், கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சிந்தனையாளர்கள் கூட்டம் அரியானாவில் சூரஜ்குந்த் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இரண்டாம் நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்கிறார்.
இந்நிலையில் முதல் நாள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா “ஜம்மு காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்த பின் பயங்கரவாத நடவடிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 64%, பொதுமக்கள் உயிர் இழப்பு 90 சதவீதம் குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் ரூபாய் 57,000 கோடி முதலீடு பெற்றுள்ளது.
சைபர் குற்றங்கள், போதை பொருள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், தேச துரோகம் மற்றும் இது போன்ற குற்றங்களை கையாள்வதற்கு திட்டமிட இந்த சிந்தனையாளர்கள் கூட்டம் உதவும். வளங்களை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு அவசியம். 2024க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்ஐஏ கிளைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார்.