புதுடெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ) நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படாததால், அது இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் மெஹ்சனா ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கியுள்ளனர். 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வந்த இவர்களுக்கு குடியுரிமை அளிக்க மத்திய அரசு விரும்புகிறது.
குடியுரிமை திருத்த சட்டம், 2019 (சிஏஏ) விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படாததால், இவர்களுக்கு குடியுரிமை சட்டம், 1955 ஐந்தாவது பிரிவின் கீழ் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் சரிபார்த்து குடியுரிமை சான்றிதழ் வழங்குவார்