நாகர்கோயில்: கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில் பாரதிய இதிகாச சங்கலன் சமிதி தமிழ்நாடு கிளை சார்பில் நாகர்கோவில் அமிர்தா பொறியியல் கல்லூரியில் ‘கன்னியாகுமரி தின விழா’ நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு கவர்னர் ரவி உரையாற்றும் போது ‘நம் நாட்டின் ஆன்மீகத்தை அழிக்கும் வகையில் பசுவையும் குரங்கையும் வணங்குகின்றனர் என்று வெளிநாட்டினர் எழுதி வைத்துள்ளனர். 1947 இல் சுதந்திரம் பெற்றதும் வெள்ளையன் தான் நாட்டை விட்டு சென்று இருக்கிறான். ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற பிளவுபடுத்தும் சிந்தனை மாற வெகு நாளாகும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.
தவறான வரலாற்று கண்ணோட்டம் இன்னும் நம் நாட்டில் உள்ளது அதை தடுக்க இதுபோன்று நிறைய கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும்.நாட்டின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்.
வெளிநாட்டினர் வருவதற்கு முன் உலகப் பொருளாதாரத்தில் பாரத நாடு முதலிடத்தில் இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதம் நம் நாட்டில் தான் இருந்தது. பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுகளாக நம் நாட்டு வளங்களை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது கலாச்சாரம் தவறாக பரப்பப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம். ஆனால் மேற்கத்தியர்கள் அந்த வேற்றுமையை பிரிவினையாக சித்தரித்து விட்டனர். நம் நாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தான் இந்த நாட்டின் நம்பிக்கை. அவர்கள் நம் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.