தமிழ் வளர்க்கும் பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம்

0
276

பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழக மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என்று அந்த பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் அறிவுக் கூட்டாளியாக செயல்படும் பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் பேட்டியளிக்கையில், “1945ம் ஆண்டு பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணைவேந்தராக இருந்தபோது இங்கு தமிழ்ப் பிரிவு தொடங்கப்பட்டது. தமிழில் உள்ள சைவசித்தாந்தத்தையும் வடபுலத்துத் தத்துவ மரபுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பொருட்டுத் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது பாரத மொழிகள் துறையின் தமிழ்ப் பிரிவில் இளங்கலை, மொழிப்பாடம், முனைவர் பட்டம், தமிழ் பட்டயப் படிப்புகள் உள்ளன.

வட இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பணியையும் இந்தத் தமிழ்ப் பிரிவு செய்துவருகிறது. பேராசிரியர்கள் டி.பி. சித்தலிங்கையா, சிவராமன், மு. அருணாச்சலம் முதலிய புகழ்பெற்ற தமிழறிஞர்கள் இங்கு பணியாற்றியுள்ளனர். டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது 1977ம் ஆண்டு மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தமிழ் இருக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதுவரை தமிழ்ப் பிரிவில் ஐந்து பேர் ஒப்பிலக்கிய ஆய்வுத் தலைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

பாரதியின் 100வது நினைவு நூற்றாண்டையொட்டி சென்ற ஆண்டு பாரதி ஆய்வு இருக்கை ஒன்று பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழக பாரத மொழிகள் துறையில் அமைக்கப்பெறும் என்று பிரதமர் அறிவித்தார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பேராசிரியர் மற்றும் முதுநிலை ஆய்வாளருடன் அமையவுள்ள இந்த ஆய்விருக்கை, பாரதியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தும். மேலும் பாரதியின் எழுத்துகளைப் பல்வேறு பாரத மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கவும் இன்னும் தொகுக்கப்படாத பாரதி படைப்புகளை தேடிச் செம்பதிப்புகளை வெளியிடும் பணிகளையும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாகவியின் பங்களிப்பின் மீதான புதிய வெளிச்சம் பாயும் இந்நேரத்தில் பாரதி ஆய்விருக்கையின் பணிகள் கவனம் பெறும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here