சுற்றுச்சூழல் பங்களிப்புக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க
எர்த்ஷாட் பரிசை, இந்த ஆண்டு பாரதத்தின் தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘கெய்தி’ என்ற ஸ்டார்ட்அப் ‘நிறுவனம் வென்றுள்ளது. கெய்தி நிறுவனம் ‘கிரீன் ஹவுஸ் இன் எ பாக்ஸ்’ என்ற தயாரிப்பை உருவாக்கி உள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் குறைந்த அளவு நீர் மற்றும் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும். இந்த கண்டுபிடிப்புக்காக கெய்தி நிறுவனத்துக்கு, இந்தஆண்டுக்கான எர்த்ஷாட் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பரிசுக்கு, பாரதத்துடன் சேர்ந்து கென்யா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவில் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பிரிட்டன் இளவரசர் வில்லியம் பரிசு வழங்கி கௌரவித்தார். காலநிலை மாற்றம் என்பது நமது பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக இளவரசர் வில்லியம் மற்றும் ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் டேவிட் அட்டன்பரோ இணைந்து 2020ல் ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் இந்த பரிசை அறிமுகப்படுத்தினர். பரிசுக்கு தேர்வாகும் ஒவ்வொருவருக்கும்
10 லட்சம் பவுண்ட் பரிசாக வழங்கப்படும். ‘இயற்கை பாதுகாப்பு’, ‘காற்று தூய்மை’, ‘கடல் புத்தாக்கம்’, ‘கழிவு இல்லாத உலகு’, ‘காலநிலை நடவடிக்கை’ ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.