புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் மத்திய கலாச்சார அமைச்சகம் நடத்திய ஸ்ரீ அரவிந்தர் நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இணைய வழியில் கலந்து கொண்டு நாணயத்தையும் தபால் தலையையும் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி வரவேற்புரை ஆற்றினார். மத்திய அரசு ஆன்மீக குருக்கள், சாதுக்கள் மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகியோரின் சிந்தனைகளை தியாகங்களை எடுத்துக் காட்டி வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீ அரவிந்தர் 150 ஆவது பிறந்த நாள் ஓராண்டாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரவிந்தர் போன்ற ஞானிகளின் தொலைநோக்கு பார்வை அரசாங்கத்துக்கு உந்துதலாக உள்ளது என்று அமைச்சர் கிஷன் ரெட்டி தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி பாரதம் இப்போது விஸ்வகுருவாக விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 25 ஆண்டுக்கான அமிர்த கால பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இதில் அரவிந்தரின் போதனைகள் முக்கியமானவை. அனைவருக்காகவும் அனைவரும் இணைந்து முயற்சி செய்தால் உலகிற்கு இந்தியா வழிகாட்டும் நிலையை அடையும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது உரையில் பாரதியார் மற்றும் அரவிந்தரின் நட்பு பல வேறுபாடுகளைத் தாண்டி நிலைத்து இருந்தது. அரவிந்தரின் கனவு இன்று பிரதமர் நரேந்திர மோடி மூலம் சர்வதேச யோகா தினமாக, ஜி_20 தலைமை என நனவாகிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் திரு ந.ரங்கசாமி தனது உரையில் ஆன்மீக பலம் இருந்தால் தான் எந்த ஒரு நாடும் வளர்ச்சி பெறும். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் பல ஞானிகளைக் கொண்ட மாநிலம். இது சித்தர்கள் பூமி. இங்கு ஸ்ரீஅரவிந்தருக்கு நினைவு அஞ்சல்தலையும் நாணயமும் வெளியிடுவது பொருத்தமும் சிறப்பும் வாய்ந்ததாகும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் இந்தியாவும் அதன் எதிர்காலமும் என்ற மையக் கருத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர்கள், சட்டமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கலாச்சார அமைச்சகத்தின் இணை செயலாளர் திருமதி உமா நந்தூரி, ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி, அரபிந்தோ ஆசிரம நிர்வாகிகள், அரபிந்தோ சொசைட்டி நிர்வாகிகள், புதுச்சேரி அரசின் செயலாளர்கல், காவல் துறை யுஅர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.