பி.கே ஐயங்கார்

0
356

பாரதத்தின் அமைதிக்கால உபயோகம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கான பிரயோகம் ஆகியவற்றுக்கு அணுசக்தியை முன்னிறுத்திய விஞ்ஞானிகளின் வரிசையில், மறைந்த பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் ஐயங்கார் ( P.K.Iyengar) முன்னிலையில் இருக்கிறார். அவருடைய நினைவுநாள் டிசம்பர் 21. திருநெல்வேலியில் 1931ல் பிறந்த ஐயங்கார், தனது 21ம் வயதில் நாட்டின் அணுசக்தித் துறையில் பணியில் அமர்ந்தார். அவர் தனது 80வயது வரை அணுசக்தி பற்றிய ஆராய்ச்சி மற்றும் உபயோகம் எனும் இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

1974ல் “புன்னகை புத்தர்” என்று பெயரிடப்பட்டு போக்ரானில் நிகழ்ந்த அமைதிக்கால அணுவெடிப்பை முன்னின்று நடத்தினார். அதற்காக பாரத அரசாங்கம் 1975ல் இவரை பத்மபூஷன் விருதளித்து கௌரவித்தது. பின்னர் 1998ல் 200 கிலோ டன் அளவிலான “சக்தி 98” என்று பெயர் கொண்ட போக்ரான் 2 அணுவெடிப்பிலும் இவருடைய பங்களிப்பு இருந்தது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் இந்திய அணுசக்திப் பேரவையின் முன்னாள் குழுமத் தலைவராகவும் இருந்துள்ளார்.

“துருவா”. என்ற அணுஉலையை மும்பை ட்ராம்பேயில் வெற்றிகரமாக நிறுவி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னாளில் “நரோரா” மற்றும் “காக்ராபூர்” ஆகிய இடங்களிலும் அணுவுலைகள் அமைத்தார். அணு உலைகளில் திரவ நிலை சோடியம் உபயோகிப்பது பற்றிய ஆராய்ச்சி செய்தார். திரட்சி மிகுந்த அணுஉலை கன நீரை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் செய்தார். மூலக்கூறு உயிரியல், இயற்பியல், பொருள் விஞ்ஞானம் ஆகிய எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சியை நம்நாட்டில் ஊக்குவித்தார்.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகளை உற்பத்தி துறைக்கு மாற்றம் செய்வதற்காக “தொழில்நுட்ப பரிமாற்ற நிலையத்தை” நிறுவினார். அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதாக ‘இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல்’ உடன்பாட்டை எதிர்த்தார். தன் வாழ்நாளிலேயே அநேக உள் மற்றும் அயல்நாட்டு விருதுகள் பெற்ற இவர், ‘அகஸ்தியர் அகில உலக நிறுவனம்’ மூலம் கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தார். 2011ல் தனது 80 வயது வரை ஓயாது பணியாற்றிய பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் ஐயங்காரின் பங்கு இந்திய அணுவிஞ்ஞான சரித்திரத்தில் நிரந்தரமான இடம் பெற்ற ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here