தை பொங்கல் விழா

0
286

தை பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய ப்ரம்மாண்டமான நிகழ்வுகளிலிருந்து இயற்கை, சூரியன், பசுக்கள், காளைகள் போன்றவற்றின் மூலம் தாம் அடைந்த பயன்களுக்கு நன்றிக்கடனாக அவற்றை போற்றும் விதமாக அமைந்ததிருவிழாவாக இத்திருநாட்கள் அமைகின்றன. நான்கு நாட்கள் பண்டிகை அமைப்பில், முதல் நாள் கொண்டாட்டம்தான் போகி. சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (அதாவதுபொங்கல் திருநாளின் முதல்நாள்) போகி கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் நாள் தைப்பொங்கல். அதாவது, தை மாதத்தின் முதல் நாள் பொங்கல். சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் மாதர் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பதாக ஐதீகம். மார்கழி நோன்பிலும், ஆண்டாளின் திருப்பாவை மூலமாக ஆழியுள் புக்கு முகர்ந்து என்றும், தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்… என்கிற ரீதியாக மழையின் தேவை கூறப்படுகிறது.

விவசாய பெருமக்கள், மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் இல்லம் கொண்டுவந்து சேர்த்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், கதிரவனுக்கு, தம்மோடு சேர்ந்து உழைத்த பசுக்கள் போன்ற கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து சங்ககாலத்தில் வழிபட்டனர். அந்தப் பண்பாடு, கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.

இன்றைய கால கட்டத்தில், தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்கின்றன. பொங்கலன்று அதிகாலை வீடுகளை சுத்தப்படுத்தி வீட்டு வாசல் பகுதிகள் வண்ணக்கோலங்களால் அலங்கரித்து வீட்டின் முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவித்து புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவுவர். நன்றியறிதலாக, தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் சுற்றத்தாருக்கும் குடும்பத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் நுகர்வது நமது பாரம்பரியமாகும்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here