தேவபிரஸ்னம் என்பது கேரளாவில் உள்ள கோயில்களின் செயல்பாடுகள் குறித்த ‘தெய்வீக கருத்தை’ அறிய செய்யப்படும் ஒரு முக்கிய ஜோதிட சடங்கு. குறிப்பாக கோயில்களில் ஏற்படும் சில பிரச்சனைகள் உள்ளிட்ட கடினமான காலங்களில் இது நடத்தப்படுகிறது. இதில் வரும் பல முடிவுகள், மனித தர்க்கத்தால் மதிப்பிட முடியாவிட்டாலும், பெரும்பாலும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது கண்கூடு. அப்படியொரு நிகழ்வு சமீபத்தில் கேரள கோயிலில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள ராமாபுரம் மற்றும் வெள்ளிப்பிள்ளை கோவில்கள் பல நூற்றாண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கின்றன. அதில் ஒன்றான புத்தன்காவு பகவதி கோயிலில், கோயில் ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டில் ஜோதிட அறிஞர் கோழிக்கோடு விஜயராகவ பணிக்கர் தலைமையில் மூன்று நாள் ‘அஷ்டமங்கள தேவபிரஸ்னம்’ சமீபத்தில் நடைபெற்றது. வெள்ளில்லப்பிள்ளி புத்தன்காவு பகவதி கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையைக் கண்டறியும் வகையில் நடைபெற்ற இந்த தேவபிரஸ்னத்தில், அந்த சிலை விரைவில் ஒரு நீர்நிலையில் சிலை கண்டுபிடிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படியே கோயிலில் உள்ள ‘மணிகிணறு’ என்ற கிணற்றில் இருந்து அந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த தேவபிரஸ்னத்தின் படி, அக்கோயில் 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மன்னரின் மறைவுக்குப் பிறகு, கோயில் அழிக்கப்பட்டது. யாரோ சிலர் சிலையை எடுத்து கோயிலுக்கு அருகிலுள்ள நீர்நிலையில் வீசினர். மூன்று மாதங்களுக்குள் சிலையை மீட்க முடியும் என தெரியவந்தது. பின்னர், கோயில் ஆலோசனைக் குழுத் தலைவர் பி.எஸ்.ஷாஜிகுமார், செயலர் பிஜூ பேரொட்டியேல் ஆகியோர் தலைமையில் பக்தர்கள் கோயில் வளாகத்தை ஆய்வு செய்தபோது, பழமையான அந்த மணிகினறை கண்டுபிடித்தனர். கிணற்றை தூர்வாரி பார்த்தபோது, அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிலை மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது. சிலை கண்டெடுக்கப்பட்டதை அறிந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.