வளர்ச்சியையும் திருப்தியையும் தரும் பட்ஜெட்

0
167

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 மற்றும் 2024ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். தேசத்தின் அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் அறிக்கை இது. இந்த மத்திய பட்ஜெட் 2023, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி மைல் வரை அடையும் சேவை, உள்கட்டமைப்பு முதலீடு, திறனை வெளிக்கொணரும் முயற்சி, பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி மற்றும் நிதித்துறை ஆகிய ஏழு முன்னுரிமைகள் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட் 2023 உண்மையிலேயே ஜனரஞ்சகமான ஒரு பட்ஜெட்டாகவே உள்ளது. ஒருபக்கம் உள்கட்டமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு என பல முக்கிய துறைகளில் பல்வேறு முக்கியமான திட்டங்களை அறிவித்து தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு, மறுபக்கம் வருமான வரித் தளர்வுகள் மூலம் சாமானிய மக்களையும் மாத சம்பளக்காரர்களையும் மனங்குளிர வைத்துள்ளது எனலாம்.

பட்ஜெட்டில் சில முக்கிய அம்சங்கள்:

பாரதத்தின் பொருளாதாரம் 7 சதவீதம் வரை வளர்ச்சி அடையும், இது பிற பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி அளவீடாகும். ரஷ்யா உக்ரைன் போரால் உலக நாடுகளை போலவே நமது நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார மதிப்பில் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக பாரதம் உள்ளது. இந்த பட்ஜெட் வேலைவாய்ப்பை உருவாக்குதல், இளைஞர்களின் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. முக்கியமான பல திட்டங்களில் அரசின் இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். முக்கியமாக ஸ்வச் பாரத், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, நேரடி பலன் பரிமாற்றம் மற்றும் ஜன்தன் கணக்குகள் ஆகியவற்றிலும் பல மைல்கற்களை அரசு எட்டியுள்ளது. உலக பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும், பாரதப் பொருளாதாரம் மேம்பட்டு, பலரின் கவனைத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

வரி பலகை எண்ணிக்கை 6ல் இருந்து 5 ஆக குறைப்பு. புதிய வருமான வரி உச்சவரம்பு விலக்கு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக அதிகரிப்பு. புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி இல்லை. 3 லட்சம் வரை பூஜ்ஜிய வரியும், 3 முதல் 6 லட்சம் வரை 5 சதவீத வரியும் ஆறு முதல் 9 லட்சம் வரை 10 சதவீத வரியும் 9 முதல் 12 லட்சம் வரை 15 சதவீத வரியும் 12 முதல் 15 லட்சம் வரை 20 சதவீத வரியும் 15 கட்சத்திற்கு மேல் 30 சதவீத வரியும் விதிக்கப்படும். அனைத்து மாத சம்பளக்காரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அளிக்கப்படும் நிலையான விலக்கு (standard deduction) சலுகை புதிய வருமான வரி விதிப்பின் கீழ் 52,500 ரூபாய் அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கான அதிகப்படியான சம்பள உயர்வைப் பொருத்து விடுப்பிற்கீடான பணம் பெறுதல் வரம்பு 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகப்படியான வருமான வரி அளவீட்டைக் குறைக்கும் விதமாக வருமான வரி விதிப்பில் இருக்கும் சர்சார்ஜ் அளவீட்டை 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போதுள்ள அதிகப்படியான வரி விதிப்பு 42 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாகக் குறையும். இதன் மூலம், நேரடி வரி வருவாய் அதாவது தனிநபர் வருமான வரி பிரிவில் மட்டும் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் அரசுக்கு 37,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஒருமுறை சேமிக்கும் ‘மகிளா சம்மான் பச்சத் பத்ரா’ என்றபு திய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இத்திட்டத்தில் பெண்கள் ரூ. 2 லட்சம் வரை டொபாசிட் செய்ய முடியும். பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியுடன் அதற்கு நிலையான வட்டியாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தின்படி அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தோட்டக் கலைத் துறையை மேம்படுத்த 2,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு. 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்கப்படும், புதிதாக 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க மாநில தலைநகரங்களில் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் உருவாக்கப்படும். இயற்கை விவசாயத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை உருவாக்க 10 ஆயிரம் இடங்களில் உரம் தயாரிப்பு மையம் ஏற்படுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை உரங்களை ஊக்குவிக்க “பிஎம் பிரணாம்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். சிறுதானிய உற்பத்திக்கு மத்திய அரசு முன்னுரிமை தரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்புச் செய்ய முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. ரூ. 10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அது சார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சாமானியர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும் வீட்டுக் கனவை நனவாக்க, பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ. 79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்குகளுக்கு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும். 740 ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம், ரயில்வே துறைக்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, சாலை கட்டமைப்புகளுக்கு ரூ. 70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி இறக்குமதிக்காவ சுங்கவரி 13 சதவீதமாக குறைப்பு. மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை மாற்ற நிதியுதவி அளிக்கப்படும். இனி ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றே பான் கார்டு அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். வங்கி கேஓய்சி நடைமுறையும் எளிமைப்படுத்தப்படும்.

நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். கடந்த 2014 முதல் புதிதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கானதாக இது இருக்கும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.O திட்டம் கொண்டுவரப்படும். நாடு முழுவதும் 30 ஸ்கில் இந்தியா இன்டர்நேஷனல் மையங்கள் உருவாக்கப்படும். ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும். ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

2047க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும். நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்படும். பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இ கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை ஈர்க்கும் வண்ணம் நாடு முழுவதும் உள்ள 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும். வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த நிதியாண்டிற்கான மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் என்ற சிறப்பு நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்தத் திட்டம் அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், நீர் ஏரோட்ரோம்கள் மற்றும் மேம்பட்ட தரையிறங்கும் மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இரும்பு, துறைமுகங்கள், உரம், நிலக்கரி, உணவு தானியம் ஆகிய துறைகளுக்கான 100 முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்கள் ரூ. 75,000 கோடி அரசு முதலீட்டிலும், ரூ.15,000 கோடி தனியார் மூலங்களிலிருந்தும் செயல்படுத்தப்படும். ரயில்வே துறையை மேம்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரயில்வேக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் இதுவே அதிகம்.

9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிக்கபெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம். அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம். தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ரூ. 1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. 2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில்,பாரதப் பொருளாதாரம் உலகில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா காலத்தில் யாரும் பசியில்லாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here