கர்நாடகாவில் உள்ளசுத்தூர் மடத்தின் தலைவர் ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர ஸ்வாமிஜி மற்றும் பலர் முன்னிலையில், ஜே.எஸ்.எஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜேந்திரா ஆடிட்டோரியத்தில், ஜே.எஸ்.எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின்13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, “பல தசாப்தங்களாக, உள்நாட்டு மோதல்கள், கொள்கை சிக்கல்கள், வறுமை, கல்வியறிவின்மை, ஊழல் போன்ற பலப்பல இன்னல்களைபாரதம் சந்திக்க வேண்டியிருந்தது. உதவிக்காக பல நாடுகளிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த கடினமான காலம் இப்போது முடிந்துவிட்டது. உணவு உற்பத்தி, மின்மயமாக்கல், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் தன்னம்பிக்கையை அடைய முடிந்துள்ளது.
பாரதம் அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் உள்ளது. ஒருபுறம், அது ஒரு இருண்ட சூழ்நிலையிலிருந்து ஒரு தலைமை நிலைக்கு வெளிப்பட்டு வருகிறது. மறுபுறம், அது தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளையும் தீர்த்தாக வேண்டும். வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள பிரிவினைவாதிகள் நாட்டின் நலன்கள் உடைக்க வேலை செய்கின்றனர்.
தேசம் இப்போது வரலாற்று முன்னேற்றங்களை கண்டு வருகிறது. பாரதம் விழித்துக்கொண்டிருக்கிறது, மக்கள் ஆழ்ந்த உறக்கத்தைக் கைவிட்டு வருகின்றனர். இந்த பண்டைய நாகரிகம் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது, ஆனால் அது முடிவடையவில்லை. சமூக சமத்துவமின்மை, ஜாதிவெறி, சமூகக் கலவரம், காலாவதியான பழக்கவழக்கங்கள் போன்ற சில நீண்டகால நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும், கட்டுக்கடங்காத நுகர்வு, பொருட்களின் மீதான காதல், காழ்ப்புணர்ச்சி, தார்மீக கொந்தளிப்பு, அந்நியப்படுதல், மனோதத்துவ நோய்கள் போன்ற சில நவீன நோய்களால் பாரதம் பீடிக்கப்பட்டு உள்ளது. இந்த தீமைகளிலிருந்து நம் சமூகத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். நமது நாடு கடினமான காலங்களை கடந்துவிட்டது. மீண்டும் எழுச்சி பெறுவதற்கான உள்ளார்ந்த வலிமையை அது கொண்டுள்ளது.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு ஆட்சியாளர்கள் பாரதத்தை விட்டு வெளியேறிவிட்ட போதிலும், படித்த வகுப்பினரில் பெரும் பகுதியினர் இன்னும் தொடர்ந்து மன அடிமைத்தனத்தில் உள்ளனர். யூரோ சென்ட்ரிக் கருத்துக்கள், அமைப்புகள் மற்றும் நடைமுறைகள், மேற்கத்திய உலகக் கண்ணோட்டம் இன்னும் பல ஆண்டுகளாக நம்மை ஆள்கின்றன. ரத்தத்திலும் நிறத்திலும் அவர்கள் பாரதத்தினராக இருந்தாலும், ரசனை, கருத்து, ஒழுக்கம், அறிவுத்திறன் ஆகியவற்றில் அவர்களை ஆங்கிலேயர்களாக உருவாக்க வேண்டும் என்ற தாமஸ் மெக்காலேயின் விருப்பம் ஏறக்குறைய நிறைவேறியுள்ளது.
கல்வி, நீதித்துறை, நிர்வாகம், நிறுவனங்கள், கலை மற்றும் கலாச்சார அரங்கில் மற்றும் ஊடகங்களில் முக்கிய பதவிகளை வகித்த இத்தகைய மக்கள், காலனித்துவத்தில் வெறும் மனரீதியாக மட்டும் சிறைபடவில்லை. மாறாக, அவர்கள் பாரத கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பரதத்தையும் பாரதத்துவத்தையும் வெறுக்கிறார்கள். எனவே, மனங்களை காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்ட பாரதத்தின் ஆன்மாவை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
பாரதத்தை மோசமான வகையில் சித்தரிக்கவும், அதன் வரலாற்றை சிதைக்கவும், கலாச்சார மரபுகளை களங்கப்படுத்தவும், அது நிலைநிறுத்தப்பட்ட மதிப்புகளை இழிவுபடுத்தவும் சில சுயநலவாதிகளால் நன்கு சிந்திக்கப்பட்ட சதி செயல்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கை மாற்ற வேண்டும். பாரதத்தைப் பற்றிய ஒரு பிரமாண்டமான கதை உருவாக்கப்பட வேண்டும். கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதுடன் பாரதத்தை வலுவான மற்றும் செழிப்பான தேசமாக வளர்ப்பது ஆகிய இரண்டும் நமது பணியாக இருக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாரதத்தின் உலகளாவிய பங்கு ஒரு முன்மாதிரியாக உருவாகி வருகிறது.
நமது நாடு இந்த ஆண்டு ஜி20 நிகழ்வுகளை நடத்துகிறது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற பாரதத்தின் அணுகுமுறை ஜி20’ன் ‘ஒரு பூமி. ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், பாரதம் முழுவதும் ஒரு கலாச்சார மறுமலர்ச்சி நடக்கிறது. நமது திறமையான இளைஞர்கள் பல துறைகளில் உலகத்துடன் போட்டியிடும் திறன் கொண்டவர்கள். ‘பாரதம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் அமிர்த காலம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சொந்தமானது’ என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார். அடுத்த 25 ஆண்டுகள் உங்களுக்கு சொந்தமானது. இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தேசத்தின் வாழ்க்கைக்கும் ஒரு பொற்காலமாக இருக்கும். எனவே உங்கள் பாதையை நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பீர்கள், இந்த தேசத்தை மேலும் சிறந்ததாக மாற்றுவதில் நீங்கள் என்ன பங்கை வகிப்பீர்கள் என்பது மிகவும் முக்கியமானது” என கூறினார்.
இந்த விழாவில் ஜே.எஸ்.எஸ் ஜே.எஸ்.எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி துணைவேந்தர் டாக்டர் சுரீந்தர் சிங், துணைவேந்தர் டாக்டர் பி சுரேஷ், நிர்வாகச் செயலர் டாக்டர் சி.ஜி பெட்சூர்மத், பதிவாளர் டாக்டர் பி.மஞ்சுநாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம், 2,339 மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்றனர். மேலும் பலருக்கு முனைவர் பட்டங்கள், எம்.சி.எச் பட்டங்களும் வழங்கப்பட்டன. கல்வியில் சிறந்து விளங்கிய 60 பேருக்கு 83 பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.