விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி அங்கிருந்து அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாரதத்தின்விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதில் ராக்கெட்டில் கேப்சூல் வகையிலான விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். அந்த விண்கலம் பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் புவிவட்ட சுற்றுவட்டபாதையில் 3 நாள் சுற்றியபின் விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பும். அது கடலில் பத்திரமாக விழும்படி வடிவமைக்கப்படுகிறது. கடலில் விழுந்த அந்த விண்கல கேப்சூலை கடற்படையினர் மீட்டு அதிலிருந்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டு வருவார்கள். இதற்கான பயிற்சியில், இஸ்ரோவும், கடற்படையும் ஈடுபட்டன. இதற்காக கேரளாவின் கொச்சியில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், “விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக மீட்பதுதான் ககன்யான் திட்டத்தில் இறுதி நடவடிக்கை. அதனை மிக குறைவான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை நாங்கள் இறுதி செய்ய வேண்டும். இந்த பரிசோதனைகள் முதலில் துறைமுகத்தில் மூடப்பட்ட நீர்நிலை பகுதியிலும், பின்னர் திறந்தவெளி கடல் பகுதியிலும் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.