கோவாவில் உள்ள 350 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சப்தகோடேஷ்வர் கோயில் கோவாவை ஆளும் பா.ஜ.க அரசின் சீரிய முயற்சிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பிப்ரவரி 11 அன்று புனரமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலை திறந்து வைத்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வழித்தோன்றலும், மகாராஷ்டிர மாநிலம் சதாரா தொகுதி எம்.எல்.ஏவுமான சிவேந்திர ராஜே போஸ்லே முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டது. கோயிலை புதுப்பிக்கும் பணியை மாநில காப்பகங்கள் மற்றும் தொல்லியல் துறை மேற்கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சப்தகோடேஷ்வர் கோயிலை புதுப்பித்துள்ள கோவா அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 35 கி.மீ தொலைவில் நர்வே கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீ சப்தகோடேஷ்வர் தான் கோவாவின் ராஜ தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயில் முதலில் கோவாவின் திவார், திஸ்வாடியில் அமைந்திருந்தது. கடம்ப வம்சத்தால் கட்டப்பட்ட இந்த கோயிலை கி.பி 1,300களில் பஹ்மனி ஆட்சியாளர்கள் தாக்கி அழித்தார்கள். பின்னர், விஜயநகர பேரரசு ஆட்சியின் போது மீண்டும் கட்டப்பட்ட இந்த கோயில், 1540ல் போர்த்துகீசிய ஆட்சியர்களால் அழிக்கப்பட்டது. பின்னர் இத்தகைய தொடர் அழிவுக்கு பயந்து, கோயில் தற்போது உள்ள இடமான நர்வே, பிச்சோலிமுக்கு மாற்றப்பட்டது. தற்போதைய கோயில் 1668ல் சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் கட்டப்பட்டது. மேலும், அவரது வெற்றிகரமான பிரச்சாரங்கள் கோவாவில் அக்காலத்தில் நடைபெற்ற போர்த்துகீசிய மிருகத்தனம் மற்றும் மத மாற்றங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. போர்ச்சுகீசிய ஆட்சியின் போது கோவாவில் உள்ள ஹிந்து கோயில்கள் மற்றும் மதத்தின் பாதுகாப்பிற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜா மற்றும் சம்பாஜி மகாராஜா ஆகியோர் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இவ்விழாவில் பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், “சத்ரபதி சிவாஜி மகாராஜின் வழித்தோன்றல்கள் முன்னிலையில் நடைபெறும் சமயச் சடங்குகளுக்குப் பிறகு கோயில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ சப்தகோடேஷ்வர் கோயில், ஆன்மீக பாரம்பரியங்களுடனான நமது இளைஞர்களின் தொடர்பை ஆழப்படுத்தும். இது கோவாவின் சுற்றுலாவை மேலும் அதிகரிக்கும். கோவாவில் போர்த்துகீசியர்களால் பல கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை புனரமைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. இடிக்கப்பட்ட அனைத்து கோயில்களையும் கட்ட முடியாது என்பதால், போர்ச்சுகீசியர் ஆட்சியின் போது அழிக்கப்பட்ட அனைத்து கோயில்களின் நினைவாக, சப்தகோடேஸ்வரர் கோயில் தற்போதுள்ள நர்வேக்கு மாற்றப்படுவதற்கு முன்பு இருந்த திவார் தீவில் மாநில அரசு மிகப்பெரிய கோயிலைக் கட்டும். கோவா பல்கலைக்கழகத்தில் சிவாஜி மகாராஜின் பெயரில் ஒரு ஆராய்ச்சி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு கோவா மாவட்டத்தின் பெதுல் கிராமத்தில் அமைந்துள்ள கோட்டை உட்பட மாநிலத்தில் சிவாஜி மகாராஜாவால் கட்டப்பட்ட கோட்டைகளை சரிசெய்து புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.