மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் தற்போது உலகப் பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிறுவி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட ‘கேட்ஸ் நோட்ஸ்’ என்ற அவருடைய வலைப்பதிவில், “பாரதம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது. உலகத்தில் உள்ள பல நாடுகளும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டுள்ள போதும், அவற்றிற்கெல்லாம் தீர்வு காண முடியும் என்பதை பாரதம் நிரூபித்துள்ளது. சரியான முயற்சிகள் மற்றும் அதனைக் கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை தெரிந்துகொண்டாலே உலகம் பல பெரிய பிரச்சனைகளிலிருந்து தீர்வு கண்டு முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன். பல உலக நாடுகள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது அதைத் தீர்க்க முடியாமல் போவதற்கு, போதிய நேரமும் பணமும் இல்லாததே காரணம் என்று கூறுகின்றன. ஆனால் பாரதம் இதை தவறு என்று நிரூபித்துக் காட்டியுள்ளது. இதற்கு அந்த நாடு அடைந்துள்ள முன்னேற்றமே சிறந்த சான்று. பாரதம் பெரிய சவால்களை சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. உதாரணமாக, போலியோ போன்ற நோய்களை ஒழித்துள்ளது. எச்.ஐ.வி பரவலைக் குறைத்துள்ளது. வறுமை மற்றும் குழந்தை இறப்புகளையும் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி 2021ல் ரோட்டோ வைரசால் குழந்தைகள் பாதிப்படைந்து கொண்டிருக்கும்போது, குறைந்த விலையில் தடுப்பூசியைத் தயாரித்தது. தற்போது இந்தத் தடுப்பூசியை பல நாடுகளும் பயன்படுத்துகின்றன” என்று பட்டியலிட்டுள்ளார்.