2023 மார்ச் 19-ம் தேதியன்று, இந்தியா – மாலத்தீவு இடையிலான 4-வது பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை (டிசிடி) மாலேயில் நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத்துறைச் செயலர் திரு.கிரிதர் அரமானே, மாலத்தீவு பாதுகாப்புத்துறைச் செயலர், மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் அது குறித்து திருப்தி தெரிவித்தனர். தற்போதுள்ள இருதரப்புப் பயிற்சிகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட நிலையில், இந்தப் பயிற்சிகளின் கடினத் தன்மையை அதிகரிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்தியா மற்றும் மாலத்தீவுகளின் ராணுவம் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகள் இன்னும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு கிரிதர் அரமனே நன்றி தெரிவித்தார்.