நாட்டில் பாதுகாப்புத்துறை, உற்பத்தியை மேம்படுத்த இரண்டு பாதுகாப்பு தொழில் வழித்தடங்களை அமைப்பதற்கான அறிவிப்பை 2018-19-ம் நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. ஒரு பாதுகாப்பு தொழில் வழித்தடம் உத்தரப்பிரதேசத்தில் அலிகர், ஆக்ரா,ஜான்சி, கான்பூர், சிராக்கூட் மற்றும் லக்னோ ஆகிய 6 முனையங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. மற்றொரு வழித்தடம் தமிழ்நாட்டில் சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி ஆகிய 5 தொழில் முனையங்களை கொண்டதாகும்.
உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த மாநிலத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் ரூ.12,191 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் ரூ.2445 கோடி முதலீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் 53 நிறுவனங்களின் மூலம் ரூ.11,794 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் ரூ.3894 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் புதிதாக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை.