மே 29, 1923 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு.பஞ்சநாத முதலியார் – பார்வதி அம்மாள் தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால். தனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, “தேவார இசைமணி” பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், அண்ணாமலை இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி “சங்கீத பூசணம்” பட்டத்தைப் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் ஈடுபட்டார். தேவார இசையை குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தவர். யாழ்ப்பாணத்தில், 1960களில் “சைவ பரிபாலன சபை” ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார். 1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து விலகி சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் தந்துள்ளனர்.