வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் மோடி!

0
54

புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்லும் முன்பு பிரதமர் மோடி உரை!
புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இன்று நாம் புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பழைய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
விநாயகர் சதுர்த்தி பூஜையைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றம் இன்று முதல் செயல்படத் தொடங்கி இருக்கிறது. முன்னதாக, இன்று காலை 9.15 மணியளவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்தது. அப்போது, பழைய நாடாளுமன்றம் குறித்த மலரும் நினைவுகளை தலைவர்கள் பலரும் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், பிரதமர் மோடி பேசுகையில், “அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தியில் புதிய மசோதாக்களை கொண்டுவருவது சிறப்பானது. புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக நாம் இன்று புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்லவுள்ளோம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதியுடன் புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்வோம். நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை உருவாக்கிய தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி.
எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அரசியல் பலன்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதில் நாம் நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அறிவும் புதுமையும்தான் தேவை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது கொள்கைகள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், நாடு முன்னேறி செல்ல வேண்டும் என்பதில் தான் நமது நோக்கம் இருக்க வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவத்தை மறந்து முன்னேற்றத்திற்கான பாதையில் பயணிக்க வேண்டும். அரசின் மசோதாக்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.
சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு நமது இளைஞர்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது. விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் கோலோச்சுகின்றனர். மகளிர் மேம்பாடு என பேசிக்கொண்டிருப்பதைவிட அதை செயல்படுத்துவது அவசியம். இதனால்தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்படுகிறது. நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதில் இந்த நாடாளுமனறக் கட்டிடம் சாட்சியாக இருந்துள்ளது. ஏராளமான சட்டங்களை இயற்றியதன் மூலம் பல்வேறு தரப்பினருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.
முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் இஸ்லாமிய தாய்மார்களும், சகோதரிகளும் தங்களுக்கான நீதியை பெற்றார்கள். அதற்கான சட்டம் இந்த நாடாளுமன்றத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டத்தை நாம் ஒருமனதாகக் கொண்டு வந்து அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தோம். சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்தது நமக்கான பெருமிதம். இந்த நாடாளுமன்றம் சட்டங்கள் இயற்றி திருநங்கைகளுக்கு நீதி வழங்கி இருக்கிறது. அதன்மூலம் அவர்கள் கண்ணியமான முறையில் கல்வி கற்கவும், வேலைவாய்ப்பைப் பெறவும், சுகாதாரத்தைப் பெறவும் முடிந்திருக்கிறது.
அமிர்த காலத்தின் 25 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சிறு சிறு பிரச்சனைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. தற்சார்பு இந்தியாவை முதலில் நாம் அடைய வேண்டும். இது காலத்தின் தேவை. இது அனைவரின் கடமை. நாம் புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்ல உள்ளோம். அதேநேரத்தில், இந்த பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் கெளரவம் ஒருபோதும் குறையக்கூடாது. இதை பழைய நாடாளுமன்றக் கட்டடமாக விட்டுவிடக்கூடாது. எனவே, நீங்கள் ஒப்புக்கொண்டால் இது சம்விதன் சதன் என அறியப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here