இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய, ஆயுதம் தாங்கி ருத்ரா ஹெலிகாப்டர் வாயிலாக வெற்றிகரமாக சோதனை நடத்தி முடிக்கப்பட்டதாக நம் ராணுவம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் தயாரித்த துருவ் ஹெலிகாப்டர்களில், அடுத்த தலைமுறை ராக்கெட்கள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தக்கூடிய ஹெலிகாப்டர்களை, ‘ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்’ நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ளது. ருத்ரா என பெயரிடப்பட்டுள்ள, 5.8 டன் எடை உடைய இந்த வகை ஹெலிகாப்டர்களில், ஆயுதங்களை பொருத்தி பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இதில், 20 எம்எம் துப்பாக்கிகள், 70 எம்எம் ராக்கெட் லாஞ்சர்கள், வான்வழி தாக்கும் ஏவுகணைகளையும் பொருத்த முடியும். இந்த ருத்ரா ஹெலிகாப்டர்களின் சோதனை, வடகிழக்கு மாநிலத்தில் பெயர் குறிப்பிடப்படாத பகுதியில் நேற்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.