சமுதாய சக்தியின் சர்வ வல்லமை 2

0
163

தேசத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்தும் முயற்சி பற்றி என்னுடைய கருத்து இது:  நமது மிக நீண்ட வரலாறு  நெடுக தாக்குதல்கள்,  பதிலடி; அதனால் ஏற்பட்ட காயங்கள் எல்லாம் உண்டு.  எனவே ஊரில் விஷயங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மனதில் ஒற்றுமை  எண்ணம் வலுப்படச் செய்ய வேண்டும்.  வரலாறு நீண்டது என்பதால் இந்த முயற்சியும் நீண்ட நாள் நடந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை எண்ணம் உள்ளவர்கள் இருப்பார்கள். ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. அவர்கள் அந்த மனநிலையில் திடமாக நிற்கச் செய்ய வேண்டும். இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தலை தூக்கும் போது ஹிந்துவுக்கு எதிராக ஹிந்து என்ற சூழல் கூட ஏற்படலாம். மதமாற்ற முயற்சிகள், கலவரங்கள் இவை  நம் மனதில் பாதிப்பு ஏற்படுத்த விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமை  ஏற்படுத்துவதில் நமக்கு சுயநலம் ஒன்றும் இல்லை. நாடு நம்முடையது; சமுதாயம் நம்முடையது; ஒற்றுமையால் நமது நாட்டுக்கு, சமுதாயத்துக்கு நன்மை என்பதால் முயற்சி செய்வோம்.

டெல்லியில் நான் பேசியது பற்றி ஸ்வயம்சேவகர்கள் கூட என்னிடம்  கேட்டார்கள்.  “புதிது ஒன்றும் இல்லை. குருஜியின் ஞானகங்கை நூலில் உள்ள கருத்துதான் அது என்றேன்.  ஸ்வயம்சேவகர்கள் புரிந்து கொண்டார்கள்.  ஹிந்து சமுதாயத்தை ஒற்றுமைப் படுத்தி வலுவுள்ளதாக்கிட வேண்டும் என்பதுதான் லட்சியம் என்பது அவர்களுக்கு தெளிவாகவே தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் ஹிந்து என்றால் யார் என்று பார்க்க  வேண்டும். உலகமே ஒரு குடும்பம் என்று எண்ணுபவர்  ஹிந்து;  அதை நினைவில் கொண்டு தொடர்ந்து  ஒற்றுமை முயற்சி செய்ய வேண்டும்.  ஒற்றுமை ஏற்பட வெகு காலம் பிடிக்கும் என்பது தான் உண்மை. இந்த நூலை எழுதியவர் பிரச்சனையைத் தீர்க்க வழி முரண்படுவது அல்ல; பேச்சுவார்த்தை  தான் உதவும் என்று கூறுகிறார். இவர் கூறுவது சரி.

ஒற்றுமை என்றால் அதற்கு நமது தாய்நாடு தான், நமது பாரம்பரியம் தான் ஆதாரம். நமது சமுதாயத்தின் கவுரவம் தான் ஆதாரம். மற்றபடி நமக்கு பரிபூரண சுதந்திரம்தான். இஸ்லாம் உள்பட எல்லா வழிமுறைகளையும்  வாழ்ந்து  பார்த்தபிறகு ராமகிருஷ்ண பரமஹம்சர் தெரிவித்த கருத்து “பாதை பல, இலக்கு ஒன்றே” என்பது தான். இத்தகைய ஒருமைப்பாட்டு சத்தியத்தை எடுத்துச் சொல்லக் கூடியவர்கள் இன்றும்  உண்டு. முஸ்லிம் பக்கீர்களுக்கு ஹிந்து சீடர்களும் உண்டு ஹிந்து ஆன்றோர்களுக்கு முஸ்லிம் சீடர்களும் உண்டு. நமது ஆன்றோர்கள் அந்த சீடர்களுக்கு   மந்திர தீட்சை  அளிக்கும்போது  சமஸ்கிருத மந்திரம் கொடுப்பதில்லை. குர்ஆன் வசனங்களையே உபதேசிப்பார்கள். எனது சொந்த ஊரான நாகபுரி சுற்று வட்டாரத்திலேயே இப்படி நாலைந்து பேர் இருக்கிறார்கள். இந்த உறவின் அடிப்படையில் ஒற்றுமை முயற்சி தொடரலாம்.

ஒவ்வொருவரும் தனது புரிதலுக்கு உகந்த விதத்தில் தனது வழிபாட்டு முறையை அமைத்துக் கொள்கிறார். அவரது சிரத்தை குறித்து இழிவாக பேசக்கூடாது.  அது பதற்றத்திற்கு வழிவகுக்கும். மாறாக ஒருவர் மற்றொருவரை சரியானபடி புரிந்துகொண்டு ஒற்றுமை காண முயற்சி செய்யும்போது ’தேசம் பிளவுபட முடியாதது, தேசம் ஒரே தேசம்’ என்ற அடிப்படை அவசியம். எவருடைய பக்தியையும் இழிவுபடுத்தும் மனப்பான்மை தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

ஹிந்துக்கள் பல தாக்குதல்களை பார்த்துவிட்டார்கள். பிறகு அதெல்லாம் ஓய்ந்து சமாதானம் தலைதூக்கியது. அதற்கிடையில் மதவெறியர்கள் கை ஓங்கியது கிலாபத் இயக்கத்தின் போதும் சரி பாகிஸ்தான் பிரிந்த போதும் சரி ஹிந்துக்கள் அதை அனுபவித்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும்  அரசியல் தூண்டுதல் காரணமாக முஸ்லிம்கள் தனி அடையாளம் காப்பாற்றிக் கொள்ள முனைப்பு காட்டினார்கள்.  உடை முதலிய விஷயங்களில் தனி அடையாளத்தை கைவிட வேண்டியது இல்லை முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குள் வருவதற்கு முன்பே உடை விஷயத்தில் வித வித அடையாளங்கள் உண்டு.  இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரே சமுதாயமாக வாழ்வது என்பது வேறு எங்கும் சாத்தியமில்லை; பாரத பூமியில் தான் சாத்தியம். முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்களே அந்த  பயத்தில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும். அவர்கள் அந்த பயத்திலிருந்து விடுபட நாம் உதவ வேண்டும்.

உள்ளதை உள்ளபடியே ஏற்க வேண்டும். பாரத பூமி ஹிந்து ராஷ்டிரம் தான். கோமாதா பூஜிக்க படவேண்டும்.  ஆனால் கூட்டமாக சேர்ந்து  கொலை (லின்சிங்) செய்பவர்கள் ஹிந்துத்துவத்திற்கு எதிரானவர்கள் ஆகிவிடுகிறார்கள். அது பயங்கரவாதம். சட்டம் தன் வேலையை செய்யட்டும்; அதேநேரத்தில் பாரபட்சமின்றி சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். என்பது முக்கியம். சங்கம் இன்று வளர்ந்தோங்கி உள்ளதால் நான் கூறும் இந்த கருத்துக்கள் குறித்து ஹிந்து சமுதாயத்தில் விவாதம்  தொடங்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான  மக்கள் என் இந்தக் கருத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.

சங்கம் ஒரு முயற்சியை தொடங்கியபின் பின் வாங்கியதில்லை. அதுபோலவே வெற்றி பெறும் சாத்தியம் பற்றி உறுதியான பின்பு தான் சங்கம் முதல் அடி எடுத்து வைக்கிறது.  எனவே வெகுகாலம் பிடித்தாலும் சமுதாய ஒருங்கிணைப்பு முழுமை அடையும். முழு சமுதாயமும் ஒன்றுபட்டு முன்னேறினால் தான் சங்கம் விரும்புகிறபடி தேசம் மகோன்னத நிலையை அடைய முடியும்.  அப்போதுதான் பாரதம் உலகின் குருவாக வழி பிறக்கும். அது இன்று உலகிற்கே மிகவும் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here