சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலை புறக்கணிக்கும்படி நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏறக்குறைய 60 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் தொண்டமர்கா பகுதியில் நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் கூறியுள்ளார்.