அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு!
விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு!
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய செயல் தலைவர் அலோக் குமார், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோவிலில் புனிதப்படுத்தப்பட்ட ‘அக்ஷத கலசம்’ ஏற்கனவே நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள், பிற இந்து அமைப்புகளுடன் சேர்ந்து, நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இந்துக் குடும்பங்களுக்கு 2024 ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் வாழும் இந்துக்களை அழைக்கவும் இதேபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அழைப்பிதழுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான தகவல்களைக் கொண்ட பகவான் ராமர் மற்றும் கோவிலின் படத்தை வழங்குவோம் என்றும் அவர் கூறினார், இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த பணியில் ஈடுபடும் விஎச்பி குழுக்கள் மற்றும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் இருந்து ‘எந்தவொரு அன்பளிப்பு, நன்கொடை அல்லது பிற பொருட்களையும் ஏற்க மாட்டார்கள் என்று குமார் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் அருகிலுள்ள கோவிலில் கூடி ஜனவரி 22 அன்று பூஜை செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.விழாவில் பங்கேற்ற இயலாதவர்கள் ‘பிரமாண்ட’ கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து, இந்த வரலாற்று நிகழ்வை அனுபவிக்கவும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு (வனவாசம்) அயோத்திக்கு பகவான் ஸ்ரீராம் திரும்பியதைக் குறிக்கும் வகையில் நாங்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறோம், ஆனால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அமிர்த காலத்தின் போது ராம் ஜி தனது பிறந்த இடத்திற்குத் திரும்பும் 2024 ஜனவரி 22 அன்று உலகம் இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் என்றும் அவர் கூறினார்.
எனவே, இந்த ‘பிரான் பிரதிஷ்டை’ (கும்பாபிஷேகம்) விழாவில் உலகெங்கிலும் உள்ள இந்து சமுதாயமும் பங்கேற்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் ராமர் கோவிலுக்கு செல்ல வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்தகைய பக்தர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 22 வரை சிறிய குழுக்களாக அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அலோக் குமார், கூறினார்