நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியேற்றினார். பின்னர், கூடியிருந்தஸ் ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் “நமது நாடு தற்போது தர்மத்தின் வழியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த சக்தி நமக்கு எங்கிருந்து கிடைத்தது என்றால், அந்த சக்தி எப்போதும் நம்மிடம்தான் இருக்கிறது. ஆனால், அதை நாம் முறையாகப் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். நமது நாடு காலம் காலமாக பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது. ஆகவே, நமக்குள் பல வேற்றுமைகள் இருக்கலாம். ஆனாலும், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் கிடைக்கும். மேலும், மக்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டின் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதில் அரசைவிட மக்களுக்குத்தான் முக்கிய கடமை உள்ளது.ஆகவே, அதை நிறைவேற்றுவதற்கு மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். அதுவே வளர்ச்சியை உறுதி செய்வதாக இருக்கும். நாம் வித்தியாசமாகத் தோன்றினாலும், பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் பாரம்பரியம் நம் நாட்டில் உள்ளது.
அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்பட்டிருப்பது நாட்டு மக்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. இந்த உத்வேகம் ஒரு நாளுடன் நின்று விடாமல், தினமும் தொடர வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் பாரதம் உலகுக்கு குருவாக விளங்கும்” என்றார்.