உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி:
வசதி படைத்தவர்கள், சமூக அந்தஸ்து உள்ளவர்கள், சாதி, மதம் அல்லது பாலினம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் என எதையும் பொருட்படுத்தாமல் உச்ச நீதிமன்றம் சாமானிய மக்களுக்காக எப்போதும் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு எந்தவொரு வழக்கும் சிறிய வழக்கு கிடையாது. நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
சில சமயங்களில் நள்ளிரவில் எனக்கு இமெயில்கள் வரும். ஒரு முறை பெண் ஒருவர் மருத்துவ கருக்கலைப்பு தேவை எனக் கூறியிருந்தார். என்னுடைய பணியாளர்கள் என்னை தொடர்பு கொண்டனர். நாங்கள் அடுத்த நாள் அதற்கான அமர்வை அமைத்தோம்.
யாரோ ஒருவரின் வீடு இடிக்கப்பட்டிருக்கலாம்… யாரோ ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கலாம்… யாராவது சரணடைய இருக்கும் நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்… இப்படி இதயத்தை நொறுக்கும் வகையிலான வழக்குகள் அனைத்திலும் நீதிமன்றங்கள் தீவிர கவனம் செலுத்துகின்றன. எங்கள் நோக்கம் மிகச் சிறிய வழக்கு என எதுவுமில்லை; அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம். சாமானியர்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் நோக்கம். யார் ஆட்சியில் இருந்தாலும், சாதாரண மக்களுக்கு கவலைகள் உள்ளன, சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
சாமானிய மனிதன் ஏதேனும் பிரச்னையை எதிர்கொண்டால், முதலில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். மாவட்ட அளவிலான நீதிமன்றங்களை பலப்படுத்தும்போது, நீதித்துறையுடன் மக்கள் தொடர்பையும் பலப்படுத்துகிறோம்.