திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக பாரதத்தின் இறையாண்மையை, நிலப்பரப்பின் உரிமையை தாரை வார்த்தார்கள். இந்த துரோகிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவின் நிலப்பரப்பை எந்தவிதமான காரணமும் இன்றி மற்ற நாடுகளுக்கு தாரைவார்த்து காங்கிரஸ் தொடர்ந்து துரோகம் செய்து வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்த தேசத்தின் நிலப்பரப்பை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை என்பதே வரலாறு. கடந்த 1947 அக்டோபர் 27 -ல் துவங்கிய இந்தியா – பாகிஸ்தான் போரில் நேருவின் தவறான முடிவால் காஷ்மீரின் பெரும்பகுதி பாகிஸ்தான் வசம் சிக்கிக்கொண்டது.
1951 -ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்த ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருபாரி என்ற இடத்தை ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தார். அதுபோல வங்காளவிரிகுடா கடற்பகுதியில் இருக்கும் கோகோ தீவை பர்மாவிற்கு (மியான்மார்) தாரை வார்த்தார்.
இவற்றை அப்போதைய மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் முதல்வரான பி.சி.ராய் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் இந்தியாவில் பகுதிகளை பிற நாடுகளுக்கு தருவதை கண்டித்ததுடன், இனி இதுபோல் நடைபெறக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974 ஜூன் 24 -ம் தேதி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். அதன்பிறகு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது மேற்கு வங்கத்தில் இருக்கும் தீன்பீகா என்ற தீவை பங்களாதேஷுக்கு தாரை வார்த்தார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தது கம்யூனிஸ்ட்களின் ஆட்சி. இப்படி தொடர்ந்து நிலப்பரப்பை வழங்கி வந்தது காங்கிரஸ் கட்சி.
தவறான அயல்நாட்டு கொள்கையால் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் இந்திரா காந்தி. அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி இந்த சதிக்கு உடந்தையாக செயல்பட்டார்.
இதனை எதிர்த்து பா.ஜ.க.வின் முந்தைய அரசியல் கட்சியான பாரதிய ஜனசங்கத்தின் தமிழக தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனசங்கத்தின் அவைத் தலைவராக இருந்த வாஜ்பாய் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு குரல் கொடுத்தார். கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைக்குரிய பகுதி என பிரதமராக இருந்த இந்திராகாந்தி குறிப்பிட்டதை கண்டித்தார்.
உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் கேட்ட தகவல்களை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் இந்திரா காந்திக்கு அனுப்பி வழக்கு தள்ளுபடியாக, கருணாநிதி காரணமாக இருந்தார்.
கச்சத்தீவு பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு பல நூறு ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. கச்சத்தீவில் இருந்துதான் இராமேஸ்வரம் இராமநாத சுவாமிக்கு அபிஷேக பால் வந்து கொண்டு இருந்தது. 1968 -ம் ஆண்டு வரை கச்சத்தீவு இராமநாத சமஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்தது.
அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கவும், தங்கள் வலைகளை உலர்த்தி ஓய்வு எடுத்தும் வந்தார்கள். கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை இருந்தது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த உடன்படிக்கையில் இருந்த ஆறாவது ஷரத்தை (பிரிவு), இந்திய மீனவர்களுக்கான உரிமையை இந்திரா காந்தி ரகசியமாக நீக்கினார். அப்போது, கருணாநிதி ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க மத்திய அரசை குறைகூற விரும்பவில்லை என பசப்பு நாடகத்தை அரங்கேற்றினார்.
காங்கிரஸ் செய்த துரோகத்தால் பாரதம் இன்று வரை பல இன்னல்களை, பயங்கரவாதிகளின் போதை கடத்தல் கும்பல்களின் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. இந்தியாவை சுற்றி, விட்டுக்கொடுத்த பகுதிகள் மூலமாக சட்ட விரோத ஊடுருவல் நடைபெறுகிறது. அதனை அதிகாரிகள் தடுத்து வருகிறார்கள்.
இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துபோது ஊழல் திமுக அதற்கு உடந்தையாக செயல்பட்டது என்பது மறக்க முடியாத உண்மை.
காங்கிரஸ் பாரதத்தின் நிலப்பரப்பின் உரிமையை விட்டுக் கொடுத்தபோது ஒவ்வொரு முறையும் இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. பாரதத்தின் ஒவ்வொருபிடி மண்ணும் புனிதமானது. இழந்த நிலப்பரப்பை மீட்க வேண்டும் என்று வீரத்துறவி இராம கோபாலன் சபதம் எடுக்க வைத்தார்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக பாரதத்தின் இறையாண்மையை, நிலப்பரப்பின் உரிமையை தாரை வார்த்தார்கள். இதனை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும்.
எனவே, கச்சதீவை மீட்க வேண்டும் என்பது ஒவ்வொரு தேச பக்தனின் குரல். கண்டிப்பாக, அது நடந்தே தீரும். அதேசமயம் இதுபோல் மீண்டும் நிலப்பரப்பை இழக்காமல் இருக்க சுயநல அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளில் மயங்கக் கூடாது. இந்த பச்சை துரோகிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.