ஜூன் 26, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியின் வழிகாட்டுதலின் படி, குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமதுவால் அரசியலமைப்புச் சட்ட விதி 352-ன் படி நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது.
நெருக்கடி நிலை, 25 ஜூன் 1975 முதல் 23 மார்ச் 1977 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் அரச ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போர் போன்ற நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் சூழலில் மட்டும் அமல்படுத்தப்பட வேண்டிய நெருக்கடி நிலை, இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும், ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது.
தனிமனித உரிமைகள் தகர்த்தெரியப்பட்டன. குடிமக்கள் அனுதினமும் அல்லல்பட்டனர். எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர். 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் அரசாங்கம் செய்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக்குழு தந்த அறிக்கையின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் சுமார் 1,10.806 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்திய ஜனநாயக நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியாக நெருக்கடி நிலை இருந்தது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டு வந்தது. வானொலி, பத்திரிகைகளில் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களுக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான மிசா மூலம் ஆயிரக்கணக்கானவர்கள கைது செய்யப்பட்டனர். பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை அனைத்தும் முற்றிலும் ஒடுக்கப்பட்டன.
யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடிக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர். எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர்.
மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். வீதிகளில் படுத்திருந்த அப்பாவிகள் பலர் வலுக்கட்டாயமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டனர். இதில் பலர் மிக மோசமாக பாதிப்பும் அடைந்தனர், பலர் இறந்தும் போயினர்.