உதம்சிங் நினைவு தினம்

0
249
21 ஆண்டுகள் காத்திருந்து தன் மூச்சு,செயல்,வாழ்வு அனைத்தையும் இதற்கு மட்டுமே அர்பணித்து பழி வாங்கிய இந்திய சுதந்திர போராட்ட போராளி பற்றி தெரியுமா…? அவர் தான் உத்தம் சிங்.
 இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்த ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும், குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.
 ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உதம்சிங் என்ற இளைஞன் சபதம் செய்தான்.
 சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உதம் சிங்.
 உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள்.
 பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும், ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.
 அந்தக் கொலை வழக்கில், உதம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம். “தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும் என்று, முழங்கினார் உத்தம் சிங்.
 ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here