புதுவை பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சார்பில் மார்ச் 24, 25 தேதிகளில் “இந்திய அறிவு முறைக்கு வட்டார இலக்கிய பாரம்பரியத்தின் பங்களிப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், ‘பாரதத்தின் அறிவுசார் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது அவசியம். காலனிய, மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் இன்றைய இளைய சமூகம் பாரத அறிவுசார் பாரம்பரியத்தை இழந்து நிற்பது வேதனைக்குரியது. நமது பாரம்பரிய அறிவுசார் தரவுகளை, முறைகளை அறிந்து கொள்வதில் இன்றைய இளைஞர்களிடம் ஆர்வக் குறைபாடு உள்ளது. இத்தகைய கருத்தரங்குகள் இந்த குறைபாட்டை நீக்க பயன்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். மைய உரை ஆற்றிய ஆந்திர மத்திய பழங்குடி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டீ வி கட்டிமணி, ‘பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் பாரத பாரம்பரிய அறிவு முறைகளை உள்ளடக்க வேண்டியது அவசியம். செவ்வியல் தத்துவ மரபிலிருந்து நாட்டுப்புற மக்கள் இசை வரை அனைத்தும் பாரத பாரம்பரிய கலாச்சார பனுவல்களில் இலக்கிய பிரதிகளில் அறிவுச் சுரங்கமாய் கொட்டிக்கிடக்கிறது. வாய்மொழி இலக்கியங்களை பழங்குடி மொழிகளை கலாச்சார அடையாளங்களை மீட்டெடுப்பது காலத்தின் தேவை. பழங்குடி மொழிகள் அழிந்து வருகின்றன. அவற்றை கல்வி பாடத்திட்டத்தில் உள்ளடக்கி காப்பாற்ற வேண்டியது அவசியம். பட்டப்படிப்போடு செயல்முறையும் கைகோர்த்து நின்றால் தான் முழுமையான கல்வி அறிவு சாத்தியம். அதற்கு நமது பாரத பாரம்பரிய அறிவு முறைகள் வழிவகுக்கும்’ என்று கூறினார்.