பிரபுல்ல சந்திர ராய் 

0
108

வங்கதேசத்தின் குல்னா மாவட்டம் ராருலி கட்டிபரா கிராமத்தில் ஆகஸ்ட் 2,1861ஆம் ஆண்டு பிறந்தார்.   ‘இந்தியா – சிப்பாய் புரட்சிக்குப் பின்னும் முன்னும்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரையால், இவரது புகழ் லண்டனில் பரவியது.  அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர்.  ஜகதீஷ் சந்திரபோஸின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளராக சேர்ந்தார். 1896-ல் மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பதவியேற்றார். மாணவர்களிடம் ஆய்வு மனப்பான்மையை வளர்த்தார். மேகநாத் சாகா, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் உள்ளிட்ட சிறந்த அறிவியலாளர்களை உருவாக்கினார்.  அதிக நிலைத்தன்மை கொண்ட பாதரச நைட்ரேட் சேர்மத்தை கண்டறிந்தார். கந்தகம், பாஸ்பரஸ், பிளாட்டினம் ஆகியவற்றின் கரிம உலோகச் சேர்மங்கள் பற்றிய இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். இந்திய மூலிகைகள் பற்றி ஆராய்ந்தார். அவற்றில் இருந்து மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மசூட்டிகல்ஸ்’ என்ற பெயரில் நாட்டின் முதல் மருந்து தயாரிப்புத் தொழிற்சாலையை 1901-ல் நிறுவினார்.  10 ஆண்டுகள் கடுமையாக பாடுபட்டு ஆராய்ந்து, இந்து மதத்தில் வேதியியல் குறிப்புகள் தொடர்பான நூலை 2 தொகுதிகளாக வெளியிட்டார். பிரம்ம சமாஜத்துடன் இணைந்து சமூகநலப் பணிகளை மேற்கொண்டார்.  இந்திய வேதியியல் கழகம், இந்திய வேதியியல் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினார். தனது ஆராய்ச்சிகள் சம்பந்தமாக 107 கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். மாநிலக் கல்லூரியில் 28 ஆண்டுகள் பணியாற்றினார். தலைசிறந்த ஆசிரியரான இவர், ‘ஆச்சார்யா’ என்று போற்றப்பட்டார்.  கதராடை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏராளமான குடிசைத் தொழில்களைத் தொடங்கினார். அறிவியல் துறையோடு, சமூக மேம்பாட்டுக் களத்திலும் முனைப்புடன் பாடுபட்ட பிரபுல்லா சந்திர ராய் 83-ம் வயதில் (1944) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here