கோவில்பட்டியில், விரைவில் விமான பயிற்சி நிறுவனம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக தொழில் துறை மேற்கொண்டுள்ளது. நாட்டில், விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 16 கோடியாக உள்ளது. இது, அடுத்த 10 ஆண்டுகளில் 30 கோடிக்கு மேலாக உயரும்.தற்போதுள்ள விமான ஓட்டிகளின் எண்ணிக்கை 10 ஆயிரம்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் விமான ஓட்டிகள் தேவை, 23 ஆயிரத்தை தாண்டும்.
விமான ஓட்டி பயிற்சி நிறுவனங்களை அதிகரிக்கவும், அதற்கு தேவையான ஓடுதளங்களை அமைக்கவும், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம், 2015ல் அறிவிப்பாணை வெளியிட்டது.இதன்படி, தமிழகத்தில், விமான பயிற்சி நிறுவனங்கள் துவங்க பல்வேறு நடவடிக்கைகளை, தொழில்துறை மேற்கொண்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் என்ற கிராமத்தில், தனியார் நிறுவனம் பயன்படுத்திய விமான ஓடுதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.
கோவில்பட்டியில் விரைவில், விமான பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.இதனால், அரசுக்கு நேரடி வருவாய் அதிகரிப்பதுடன், உள்ளூர் பொருளாதாரமும், ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். மேலும், பல விமான பயிற்சி நிறுவனங்களை துவங்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, தொழிற்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்