சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகர் நினைவு தினம் இன்று

0
157

பால கங்காதர திலகர் – சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கியவர்

1. மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் 1856 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறையில் இருந்து மீட்பதற்காகவே சட்டப்படிப்பில் சேர்ந்தவர், 1879-ல் சட்டப்படிப்பை முடித்து, பல தேசபக்தர்களை சிறையில் இருந்து விடுவித்தார்.

2. கோபால் கணேஷ் அகர்கர், விஷ்ணுசாஸ்திரி உள்ளிட்டோருடன் இணைந்து 1881-ல் ‘கேசரி’ என்ற மராத்தி இதழையும், ‘மராட்டா’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் தொடங்கினார். இதன் தலையங்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க வைத்தன.

3. ‘திலக் மகராஜ்’, ‘லோகமான்ய’ என்று போற்றப்பட்டார். ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்’ என்று முழங்கினார். ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4. மக்களிடம் ஒற்றுமை, நாட்டுப்பற்றை ஏற்படுத்த விநாயகர் சதுர்த்தி விழா, சத்ரபதி சிவாஜி உற்சவங்களைத் தொடங்கிவைத்தார்.

5. பம்பாய், புனேயில் 1896-ல் பிளேக் நோய் பரவியபோது நிவாரணப் பணிகளில் அயராது ஈடுபட்டார். அப்போது, மக்களைக் காப்பாற்றாமல் கொண்டாட்டங்களில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இவர் எழுதிய தலையங்கமே காரணம் என்று கூறி சிறையில் அடைக்கப்பட்டார்.

6. வங்கப் பிரிவினை எதிர்ப்பு, சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவு, அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு என பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

7. தனது பத்திரிகையில் இளம் புரட்சியாளர்களை ஆதரித்து எழுதியதால், மீண்டும் 6 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ‘கீதா ரகசியம்’ என்ற நூலை எழுதினார்.

8. 1914 – ல் விடுதலையானதும் ஊர் ஊராகச் சென்று சுயாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1919-ல் இங்கிலாந்து சென்று இந்திய சுயாட்சிக்கு ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாலகங்காதர திலகர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1920 ஆகஸ்ட் 1-ம் தேதி 64-வது வயதில் மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here